முதல் தலைமுறையை குறிவைக்கிறாரா விஜய்? -விஜயின் அடுத்தடுத்த அதிரடி -பாய்ச்சல் காட்டும் விஜய் மக்கள் இயக்கம்

x

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, நடிகர் விஜய் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு....


தமிழகம் கோடை வெப்பத்தில் தகித்து கொண்டிருக்க, மறுபக்கம் "தளபதி" விஜய்-ன் திடீர் ஆலோசனைகளால் தமிழக அரசியல் தளத்தில் சலனம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு வேளை தலைவா படத்தலைப்பில் இடம்பெற்ற

"time to lead" என்ற வாசகத்திற்கான நேரம் வந்துவிட்டது என்றே எண்ண தோன்றுகிறது.

ஆம்... இத்தனை நாட்களாக "மக்கள் இயக்கத்தின் மூலம் பதுங்கி பதுங்கி வேலைகளை பார்த்த அவரது ரசிகர்கள் சமீப காலமாக வெளிப்படையாகவே பாய்ச்சல் காட்ட தொடங்கியுள்ளனர்....

சில நாட்களுக்கு முன்பு10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும், சான்றிதழ் மற்றும் அறுசுவை விருந்தும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு விஜய் தரப்பில் இருந்து வெளியானது ...

அதன் தொடர்ச்ச்சியாக 2 கோடி செலவில் நலத்திட்டங்கள் வழங்கப்படபோவதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் தெரிகிறது....

காவலன் பட வெளியீட்டில் ஏற்பட்ட பிரச்னையால்நொந்து நூலான விஜய்-ன் மனதில் அன்றே அரசியல் தீ பற்றிக் கொண்டது. அதே ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தில் அதிமுகவிற்கே என் ஆதரவு என கரம் நீட்டினார்... அந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது.

" இந்த வெற்றிக்கு நாங்கள் அணிலைப் போல் உதவினோம் என்ற விஜயின் வார்த்தைகள் பொது தளத்தில் விவாதங்களை கிளப்பியது. கூடவே விஜயின் அரசியல் ஆசைக்கு தூபம் போட்டன.

அவரின் துப்பாக்கி திரைப்படம் வெளியான நேரத்தில் சிறுபான்மையினர் எதிர்ப்பு பலமாக இருந்தது, மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி-யை வெளிப்படையாக எதிர்த்தார்.

தலைவா படத்தில் அவர் சந்தித்த நெருக்கடிகள் அவரின் அரசியல் எண்ணத்தை வலுப்படுத்தியது.

சர்க்கார் படத்தில்"என் தலைவன் முகம் எங்க பிராண்ட்" என்ற வசனத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட கட்சியை வெளிப்படையாக சீண்டினார்...

அதே படத்தில்" தமிழகத்தில் வழங்கப்பட்ட இலவச நலத்திட்ட பொருட்களை தூக்கி எறிந்து அரசியல் பேசினார்...

இப்படியாக கடந்த 12 ஆண்டுகளில் தமிழக அரசியலை நோக்கி கல் எறியத் தொடங்கிய விஜய், தன் மக்கள் இயக்கத்தை முடுக்கிவிட்டு இலவச பொருட்கள், அன்னதானம் என தமிழகத்தின் அரசியலுக்கு

தகுதி என அழைக்கப்படக்கூடிய அனைத்தையும் முன்னெடுத்தார்....

இளைஞர்களையும், மாண்வர்களையும் நோக்கி காய்களை நகர்த்தும் விஜய் முதல் தலைமுறை வாக்காளர்களை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் முஸ்தீபு காட்டுவதாக தெரிகிறது.

திரைத்துறையிலிருந்து வந்த எம்.ஜி.ஆரை கொண்டாடிய மக்கள், அதே திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த, நடிகர் திலகம் சிவாஜிக்கும், பாக்கியராஜூக்கும் வரவேற்பு அளிக்கவில்லை...

கருணாநிதியும், ஜயலலிதாவும் முழு பலத்தோடு அரசியல் செய்து கொண்டிருந்த போது இருவரையும் எதிர்த்து அதிரடி அரசியலில் இறங்கிய விஜயகாந்த்துக்கு மக்கள் பேராதரவு அளித்தனர்.

அரசியலுக்கு வருவேன் எனக்கூறி பின்னர் பின் வாங்கிய ரஜினிக்கு மத்தியில் திடீரென அரசியல் களம் கண்ட கமலஹாசனும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த வரிசையில், அரசியல் அரிதாரம் பூச தயாராகிக் கொண்டிருக்கிறார் விஜய்.

தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டுவரப்போவதாக கூறி, களம் கண்ட பலரும் தடுமாறி நிற்க புதிதாய் கிளம்பியிருக்கும் விஜய் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...



Next Story

மேலும் செய்திகள்