நண்டு சாப்பிட்ட சில நொடியில் மூச்சுதிணறல் - கணவன் கண்முன்னே துடிதுடித்த மனைவி... ஜாலியான ஹனிமூனில் பிரிந்த உயிர்

x

விடுதி ஒன்றில் நண்டு உணவு சாப்பிட்ட பெண், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... அதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சளியை முறிக்கும் நண்டு உணவு, ஒரு உயிரையே காவு வாங்கியதா? என்ற அளவுக்கு ஒருவித பதற்றத்தை உருவாக்கியுள்ளது ஒரு பெண்ணின் மரணம்...

கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். பொறியாளரான இவருக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் கிருபா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான நெட்டா பகுதிக்கு புதுமண தம்பதியான இருவரும் சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள விடுதி ஒன்றில் தம்பதி தங்கியிருந்த நிலையில், விடுதியில் வழங்கப்பட்ட நண்டு உணவை தம்பதி இருவரும் விரும்பி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது கிருபாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. கிருபாவுக்கு ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சினை இருந்து வந்ததால், உடனடியாக தங்கள் வசம் வைத்திருந்த மருந்துகளை உட்கொண்டுள்ளார். ஆனாலும், மூச்சுத்திணறல் சரியாகாமல் போகவே நிலைமை மோசமடைந்துள்ளது.

மனைவியின் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் தினேஷ்குமார், உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக கிருபா, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது, அவரது கணவரை அதிர்வுக்குள்ளாக்கியது.

தகவலின் பேரில் வந்த போலீசார், உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விடுதியில் வழங்கப்பட்ட உணவால் உயிரிழப்பு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கிருபாவுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், புதுமணப்பெண் உயிரிழந்தது குறித்து பத்மபநாபபுரம் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலா வந்த இடத்தில் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுதிணறல் ஏற்பட்டு புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் மீளமுடியா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேத பரிசோதனை வந்த பிறகே, உயிரை பறித்தது உணவாக உட்கொண்ட நண்டா? அல்லது வேறு ஏதாவது காரணமா என தெரியவரும்...


Next Story

மேலும் செய்திகள்