சிக்கிய ஆவணம்..? முடக்கப்பட்ட பணம்..? "விடிய விடிய நடந்த ரெய்டின் பின்னணி..."

x

சென்னை

அமைச்சர் பொன் முடி வீட்டில் ரெய்டு...

20 மணி நேரத்திற்கு மேல் விசாரணை...

சிக்கிய ஆவணம்..? முடக்கப்பட்ட பணம்..? "விடிய விடிய நடந்த ரெய்டின் பின்னணி..."

அமைச்சர் பொன் முடி வீட்டில் விடிய விடிய ரெய்டு செய்து விசாரணை நடத்தியிருக்கிறது அமலாக்கத்துறை... தொடர் விசாரணையில் சிக்கியது என்ன?

தமிழகத்தின் அரசியல் களம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சமீபத்தில் சூடு பிடித்திருக்கிறது.

இரண்டு அமைச்சார்களை குறிவைத்து அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு நடவடிக்கை ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் பேசு பொருள் ஆகியுள்ளது.


தமிழக அமைச்சர்கள் குறிவைக்கப்படுகிறார்களா..? ஏனிந்த ரெய்டு… என்ன வழக்கு… விசாரணை முடிவில் கிடைத்ததென்ன போன்ற கேள்விகளுக்கு விடை காண முயல்கிறது இன்றைய குற்ற சரித்திரம்.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2006-11-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவர் விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் விதிகளை மீறி தனது மகன் சிகாமணிக்கு செம்மண் குவாரி ஒப்பந்தம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குவாரியில் ஒப்பந்தத்துக்கு மாறாக லாரி மூலம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு செம்மண் எடுத்ததாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பீடு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. அதன் பேரில், கடந்த 2012-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பொன்முடி, கவுதம சிகாமணி உள்பட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பொன்முடி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கவுதம சிகாமணி எம்.பி. சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மாதம் ஜூன் 19-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதையடுத்து செம்மண் குவாரி வழக்கு மீண்டும் பரபரப்பு ஆனது.

இந்த முறைகேட்டில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்று இருக்கலாம் என்றும், அமலாக்கத்துறை இந்த வழக்கை கையில் எடுக்கலாம் என்றும் சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமலாக்கத்துறையின் வலையில் அடுத்து சிக்கப்போவது அமைச்சர் பொன்முடி தான் என்று சமூக வலைத்தளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன.

இந்த சூழ்நிலையில் தான், சம்பவம் நடந்த அன்று சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி கோவில் அவென்யூ பகுதியில் உள்ள பொன்முடி வீட்டுக்கு காலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். சோதனை நடத்துவதற்கான ஆவணங்களை பொன்முடியிடம் கொடுத்துவிட்டு ரெய்டை ஆரம்பித்திருக்கிறார்கள்.

காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நீடித்தது. சென்னை தவிர விழுப்புரத்தில் உள்ள பொன்முடி வீடு, கவுதம சிகாமணி வீடு, அவருக்கு சொந்தமான சூர்யா பொறியியல் கல்லூரி, அலுவலகம் உள்பட மொத்தம் 9 இடங்களில் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியானது.

விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள், காலை 8.10 மணி முதல் சோதனையை தொடங்கினர்.

அப்போது வீட்டில் இருக்கும் பீரோக்களை திறந்து சோதனையிட அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் பீரோக்களின் சாவியும் பொன்முடியின் குடும்பத்தினர் வசம் இருந்தது. இதனால் மாற்று சாவி தயாரிக்கும் நபரை அழைத்து வந்து பீரோக்களை திறந்து அதிலிருந்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆனால், பீரோ லாக்கரை கடைசி வரை அவர்களால் திறக்க முடியவில்லை.

சென்னையில் நடைபெற்ற சோதனையில் ரூ.70 லட்சம் பணமும், பவுண்ட், டாலர் என வெளிநாட்டு கரன்சி ரூ.10 லட்சமும் சிக்கியதாக தகவல் வெளியானது.

இந்த சோதனையில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை .

காலை முதல் மாலை வரை நடந்த 13 மணி நேர விசாரணைக்கு பிறகு அமைச்சர் பொன்முடியை சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அங்கு தனி அறையில் அவரிடம் விசாரணை நடந்தியிருக்கிறார்கள். இரவு 8 மணிக்கு தொடங்கிய விசாரணை அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. பிறகு அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பாஜகவை கருத்தியல் ரீதியில் எதிர்கும் எதிர்கட்சிகள் மீது அமலாக்கத்துறையை ஏவி பழிதீர்பதாக பாஜக மீது பல அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இந்த சூழலில் தற்போது நடந்திருக்கும் இந்த ரெய்டும் பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்