தமிழகத்தில் தீயாய் பரவி வரும் வினோத முறையில் விசித்திர கொலைகள் - சமாளிக்க முடியாமல் திணறும் போலீஸ்

x


மயிலாடுதுறையில் சயனைடு கலந்த மது அருந்தி 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சகோதரர்கள் கைதாகியுள்ளனர். அதேவேளையில் தஞ்சாவூரில் சயனைடு கலந்த மது அருந்தி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், இதுவரை துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறி வருவதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடி கிராமத்தை சேர்ந்த பழனிகுருநாதன் மற்றும் பூராசாமி ஆகியோர், மதுபானம் அருந்திய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், உயிரிழந்த இருவரும் சயனைடு கலந்த மதுவை அருந்தியிருப்பது தெரியவந்தது.

உயிரிழந்த பழனிகுருநாதனின் சகோதரர்கள், மதுவில் சயனைடை கலந்து இருவரையும் கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மயிலாடுதுறை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதனிடையே, தஞ்சாவூரில் இதேபோல் சயனைடு கலந்த மது அருந்திய விவகாரத்தில், இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இயலாமல் காவல்துறை திணறி வருகிறது.

கடந்த 21 ஆம் தேதி தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியிலுள்ள மதுபான பாரில், சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை அருந்திய குப்புசாமி மற்றும் விவேக் ஆகிய இருவர், மயங்கி விழுந்து உயிரிழந்தனர்

மது அருந்திய இருவர் உயிரிழந்ததையடுத்து, அன்று மாலையே சம்பந்தப்பட்ட பார் மற்றும் டாஸ்மாக் கடைக்கு, வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதேவேளையில் உயிரிழந்த இருவரும் குடித்த மதுவில், சயனைடு கலந்திருப்பது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்படவே, இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இதனையடுத்து 23 ஆம் தேதி, மதுபான பாரில் தடவியல் அதிகாரிகள் 4 மணி நேரம் ஆய்வு செய்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்

அதேநேரத்தில் 26 ஆம் தேதி, உயிரிழந்த குப்புசாமியின் மனைவி, தனது கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமெனவும் கோரி, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்

இந்த சூழலில் கடந்த 31 ஆம் தேதி, உயிரிழந்தவர்கள் மது அருந்திய பாரிலிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்கை, போலீசார் கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்து சென்றனர். 3 மாதங்களாக பாரில் சிசிடிவி கேமரா பழுதடைந்திருந்ததாக, பார் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் கூறியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 50க்கும் மேற்பட்டவர்களிடம், போலீசார் இதுவரை விசாரணை நடத்தியுள்ளனர்.

இருப்பினும் உயிரிழப்பு ஏற்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும், இந்த விவகாரத்தில் இதுவரை போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை ... மதுவில் சயனைடு கலந்தது எப்படி?.. இதில் குற்றவாளிகள் யார் ?என்பது போன்ற கேள்விகளுக்கு விடையை கண்டிபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

குற்றவாளிகளை போலீசார் விரைவில் நெருங்குவார்களா அல்லது வழக்கு சிபிசிஐடிக்கு மாறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்...


Next Story

மேலும் செய்திகள்