"டிரிப்ஸ் போட்ட பின் சிறு அலட்சியம்.. வெட்டி எடுக்கப்பட்ட பிஞ்சு கை“ - அன்று பிரியாவுக்கு நடந்த அதே சம்பவம்

x

அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர்- அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, கடந்த ஓராண்டாக, ஹைட்ரோசிபலஸ் எனும் தலையில் நீர்க்கசிவால் அவதிப்பட்டு வந்தது. தொடர்ந்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும், எழும்பூர் மருத்துவமனையிலும் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

பல கட்ட சிகிச்சைக்குப் பிறகு, கடந்த 25-ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மீண்டும் குழந்தை சேர்க்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு டிரிப்ஸ் ஏற்றப்பட்ட பிறகு கையில் இருந்த பட்டையை அகற்றாததால் குழந்தையின் விரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி, உணர்ச்சி அற்றதாக மாறியுள்ளது. இதுகுறித்து மருத்துவர்களிடம் கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று குழந்தையின் தாயார் கூறுகிறார்.

பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தியதன்பேரில், அந்த குழந்தைக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த குழந்தையின் கை விரல்கள் அழுகி விட்டது என்ற இடியை தலையில் இறக்கி உள்ளனர். மேலும் அந்த குழந்தையை அறுவை சிகிச்சைக்கு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன் பிறகு குழந்தை சனிக்கிழமை, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மதியம், குழந்தையின் கையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

முழுக்க முழுக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியரின் அலட்சியத்தால் தனது குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட செவிலியரை காப்பாற்ற அரசு நினைப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதற்கிடையே, குழந்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், குழந்தை குறை பிரசவத்துடன் பிறந்தது என்றும், குழந்தைக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்திறன் குறைபாடும் இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், இரண்டு தினங்களில் விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தனது குழந்தை நன்றாகத்தான் இருந்தது என்று குழந்தையின் தந்தை தெரிவித்தார்.

இதற்கிடையே, குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் கவனக்குறைவு ஏற்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியான கால்பந்து வீராங்கனைக்கு கவனக்குறைவு காரணமாக கால் அகற்றப்பட்டு, அந்த மாணவி உயிரிழந்த சோகம் இதே ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த நிலையில் மீண்டும் ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை கையை இழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்