அதிர வைத்த ஐஐடி மாணவன் தற்கொலை..ஒதுங்கிய நண்பர்கள்..இறப்பதற்கு முன்..473 பக்கங்களில் வெளிவந்த உண்மை

x

"இங்க படிச்சா எப்படி இருக்கும்?!" என்று, பேருந்தில் ஐஐடி வாயிலை கடக்கும்போது, கண்கள் அகல பார்த்த கதைகள் நம்மில் பலருக்கும் உண்டு. இந்த ஐஐடியில் படிக்க JEE எனும் கடினமான தேர்வுக்கு வருடம்தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராக, சில ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே உள்ளே நுழையும் வாய்ப்பு கிடைக்கும். உள்ளே நுழைந்தாலும், மதிப்பெண் குறைவு, பிற மாணவர் களுடன் ஒப்பீடு, குடும்பம், வகுப்பறை, கல்வி நிலையம் என மாணவர்கள் சந்திக்கும் மன அழுத்தங்கள் எக்கச்சக்கம்.

இந்த அழுத்தங்களால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள் குறித்த செய்திகளை அவ்வப்போது பார்க்கும்போது நெஞ்சம் பதறாமல் இருக்காது. இந்த அழுத்தங்களோடு, சாதிய சீண்டலும் சேர்ந்தால்...? அதுதான் நடந்திருக்கிறது மாணவன் தர்ஷன் விவகாரத்திலும். ஐஐடி முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவன் தர்ஷன் சோலங்கி. கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி, ஐஐடி மும்பை மாணவர் விடுதியின் 7ஆம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்."அர்மான் என்னை கொன்றுவிட்டான்" என்ற தர்ஷன் எழுதி வைத்த குறிப்பு கைப்பற்றப்பட, போலீசார் அர்மான் கத்ரி என்ற மாணவனை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், 473பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன. மாணவன் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பு, கடந்த 2022 டிசம்பர் மாதம் தன் பெற்றோரிடம், தான் சாதி ரீதியான சீண்டல்களுக்கு உள்ளானது குறித்தும் பகிர்ந்திருக்கிறார். மாணவன் தர்ஷன் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பது தெரிந்ததும், நட்புடன் பழகியர்வர்கள்கூட தன்னுடன் நடந்துகொள்ளும் விதத்தில் மாற்றம் வந்திருப்பதாக பெற்றோரிடம் கவலை தெரிவித்துள்ளார்.மதிப்பெண் குறைவால் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்த தர்ஷனை சாதியை சொல்லியும், இட ஒதுக்கீட்டில் இலவசமாக படிப்பதாக சொல்லியும் சில மாணவர்கள் சீண்டி இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில், மாணவர் தர்ஷனுடன் சக மாணவன் அர்மான் கத்ரி தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்ததாகவும், ஒரு கட்டத்தில் அர்மானின் மதம் குறித்து தர்ஷன் விமர்சித்ததாகவும், இதனால் அர்மான் பேப்பர்கட்டரை வைத்து தர்ஷனை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.பிணையில் வெளியில் இருக்கும் மாணவன் அர்மான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு எதிராக தற்போது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. உயிரிழந்த மாணவர் தர்ஷனின் பெற்றோர், இந்த விவகாரத் தில் மாணவன் அர்மான் மீது மட்டுமே விசாரணைக்குழு கவனம் செலுத்துவதாகவும், ஆனால், ஐஐடி மும்பை வளாகத்தில் உள்ள சாதிய பாகுபாடு குறித்து பாராமுகமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.பயிலும் இடத்தில் கல்வி மட்டுமே கண்ணாக இல்லாமல், சாதி, மதம் என மாணவர்களிடையே ஏற்படும் பிரிவினையை களைய வேண்டிய பொறுப்பு கல்வி நிறுவனங்களுடையது என்பதே நிதர்சனம்! தர்ஷனுடைய மரணமே இறுதியாக இருக்கட்டும்.


Next Story

மேலும் செய்திகள்