பெரிதும் எதிர்பார்த்திருந்த செந்தில்பாலாஜி.. அப்படியே தலைகீழாக மாறிய நிலைமை

x

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்படியே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டப்படியே நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 3வது நீதிபதி அமலாக்கத்துறைக்கு சாதகமாக அதிரடி தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அந்த நேரத்தில் செந்தில்பாலாஜிக்கு திடீர் உடல்நலக்கோளாறு ஏற்பபட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, செந்தில்பாலாஜியை 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், ஆன்ஜியோ அறுவை சிகிச்சை காரணமாக, அவர் தனியார் மருத்துவமனையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்குப் பின், செந்தில்பாலாஜியை விடுவிக்க நீதிபதி நிஷா பானு உத்தரவிட்ட நிலையில், அதற்கு மாறாக மற்றொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி, ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால், இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதனை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார்.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி கார்த்திகேயன் அதிரடி தீர்ப்பினை வெளியிட்டார்.

அதில், நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பை ஏற்பதாக - நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதாவது, கைதுக்கான காரணங்களை அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியிடம் தெரிவித்துள்ளதாகவும், நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்த நிலையில், அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் செந்தில்பாலாஜி இல்லை எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை செந்தில் பாலாஜி எதிர்த்து வழக்கு தொடரவில்லை என்றும், கைது சட்டப்படியானது, நீதிமன்றக் காவல் சட்டப்படியானது, அதனால் ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல எனக் கூறி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பை ஏற்பதாக நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்தார். மேலும், இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க பதிவுத்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்