பாட்னாவுக்கு செந்தில்பாலாஜி.. பெங்களூருவுக்கு பொன்முடி.. மே.வங்க ஆட்சியை தூக்க பிளான் - பாஜகவின் அடுத்த குறி.. அதிர்ச்சி தகவல்

x

அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவது, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பழி வாங்கப்படுகின்றனவா? என்ற விவாதத்திற்கு காரணமாகி யுள்ளது, இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற துடித்து வருகிறது, மத்திய பாஜக அரசு.

மறுபுறம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதை குறிக்கோளாக கொண்டு எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன.

சென்ற மாதம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டணியின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது இன்றும் நாளையும் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடைபெறுகிறது.

முதலாவது கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூரு சென்றுள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கௌதம் சிகாமணியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவது... தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருப்பதோடு.... தேசிய அரசியலின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடந்து முடிந்ததும் மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பெரும் புயல் வீசியதை மறப்பதற்கில்லை.

அரசியல் சாணக்கியராக அறியப்படும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவு பட்டது.

சரத் பவாரியின் சொந்த அண்ணன் மகனான அஜித் பவாரே அவருக்கு துரோகம் செய்து, பாஜக பக்கம் தாவி அம்மாநில துணை முதலமைச்சராக பொறுப்பேற்று பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், சரத் பவாருக்கு ஏற்பட்ட அதே நிலை... எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு முதல் படியில் வெற்றி கண்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும் ஏற்படும் என பாஜக தலைவர்கள் கூறி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது.... நேற்று மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சி ஐந்து மாதங்களுக்கு மேல் நீடிக்காது என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கூறியிருப்பது... சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் பெரும் கலவரத்துக்கு மத்தியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றிருந்த நிலையில், மேற்கு வங்கத்தில் எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்...

மம்தா பானர்ஜியை அவரது கட்சி எம்எல்ஏக்களே நிராகரிக்கலாம்.. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என அம்மாநில பாஜக தலைவர் சுகாந்த மஜும்தார் கூறியிருப்பது... பாஜகவின் அடுத்த குறி மேற்கு வங்கமா ? என்ற விவாதத்திற்கும் காரணமாகியுள்ளது.

இதற்கு திரிணாமுல் கட்சி சார்பில் பதிலடி கொடுக்கப் பட்டாலும்... இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்