ஆன் லைனில் திருட்டு பைக் விற்பனை... சிசிடி காட்சிகளால் சிக்கிய மெக்கானிக்...

x

பைக்ரேஸில் பதக்கம் வாங்கியவர்கள் போல முட்டி போட்டு உட்கார்ந்திருக்கும் இவர்கள் தான், வட சென்னை பகுதியில் பல நாட்களாக கைவரிசை காட்டி வந்த பலே பைக் திருடர்கள்.திருடிய பைக்குகளுக்கு போலியான ஆவணம் தயாரித்து விற்பனை செய்து வந்தவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து வந்திருக்கிறார்கள்.

சென்னையில் உள்ள யானை கவுனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல நாட்களாக பைக்குகள் திருடப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்திருக்கிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராப்பகலாக வாகன சோதனை நடத்தியும், சந்தேகத்திற்குறிய திருட்டு வண்டிகள் என எதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து பைக் திருடர்களைக் கைது செய்ய தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள். அப்போது தான் திருடப்பட்ட வாகனங்கள் அனைத்தும், யமாகா, ஹோண்டா, ஸ்ப்ளண்டர் என மிட்ரேன்ஜ் வாகனங்களாகவே இருந்திருக்கிறது.

அது மட்டுமல்லாமல், இந்த திருட்டு சம்பவங்கள் அத்தனையும் சொல்லி வைத்தாற்போல அதிகாலை நேரத்தில் நடந்திருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. உடனே பைக் திருடப்பட்ட பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்திருக்கிறார்கள். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு பல்சர் பைக் போலீசாரின் கழுகு பார்வையில் சிக்கி இருக்கிறது...

அந்த பைக்கில் வந்தவர்களின் முக அடையாளங்களைச் சோதித்துப் பார்த்த போது தான் அவர் எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ரதீஸ்குமார் என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே பைக் திருட்டு, கொலை போன்ற பல்வேறு வழக்குகள் இருப்பதை போலீசாரின் குற்ற பதிவுகள் காட்டிக் கொடுத்திருக்கிறது. சந்தேகத்தின் அடிப்படையில் ரித்திஸ்குமாரை தூக்கி வந்து விசாரித்த போது தான், அவரது தில்லாலங்கடி வேலைகள் அனைத்தும் அம்பலமாகி இருக்கிறது. பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்குகளை கள்ள சாவியைப் போட்டுக் கடத்திக் கொண்டு போகும் இவருக்கு, அதை விற்பனை செய்வதில் ஏகப்பட்ட சட்டச் சிக்கல்கள் இருந்திருக்கிறது..

பார்ட் பார்டாக பிரித்து விற்றாலும் , பைக்கின் மொத்த விலையில் பாதி கூட கிடைக்காது , இதனால் தனது கிரிமினல் மைண்ட்டை தூசி தட்டிய ரித்திஸ்குமார், OLX ஆப்பில் விற்பனைக்குக் காத்திருக்கும் ஓடாத பழைய வாகனங்களை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார். அந்த வாகனங்களில் இருக்கும் டாக்குமெண்டுகளை, அப்படியே திருட்டு வண்டிக்கான ஆவனமாக மாற்றி இருக்கிறார். போலீசாரின் வாகன சோதனையில் கூட சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, பழைய பைக்குகளில் இருக்கும் பாகங்களை அப்படியே புதிய வாகனங்களில் பொருத்தி இருக்கிறார். சேசிங் நம்பரைக் கூட அழித்து விட்டு OLX ல் வாங்கிய பழைய பைக்கில் இருக்கும் எண்ணை பொருத்தியிருக்கிறார். அதன் பிறகு எந்த OLX ல் பழைய வண்டியை வாங்கினாரோ அதே ஆப்பில் திருட்டு வண்டியைப் போலி ஆவணங்கள் மூலமாக விற்பனை செய்து வந்திருக்கிறார். இதனால் பைக்கை விலை கொடுத்து வாங்க வரும் கஸ்டமர்களுக்கு சந்தேகம் வராமல் போயிருக்கிறது.

ரித்திஸ்குமாரின் திருட்டு பைக்கிற்கு வேலூரைச் சேர்ந்த மெக்கானிக் வெங்கடேஷ் என்பவர் தான் பட்டி டிங்கரிங் பார்த்துக் கொடுத்திருக்கிறார். குறிப்பாகப் பழைய பைக்காக பார்த்துத் திருடினால் , அந்த வாகனங்களுக்கான ஸ்பேர்பாட்ஸ் கிடைப்பதில் பெரிய சிக்கல் இருக்காது என்ற தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டு வந்திருக்கிறது இந்த கும்பல். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ரித்திஸ்குமாரையும் , அவரது கூட்டாளிகளையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 12க்கும் மேற்பட்ட பைக்குக்களை மீட்டிருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்