வீல் சேருக்கு ரூ.50.. கட்டு போட ரூ.500..இருந்த 19 ரூபாயையும் பிடுங்கிய ஊழியர்.. மனைவிக்காக கண்ணீர் வடித்த முதியவர்

x

தள்ளாடும் வயதில், காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்த இந்த பாட்டியிடம்தான், அரசு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டு, சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார் குளத்தை சேர்ந்தவர் லட்சுமணன், வள்ளியம்மாள் தம்பதி. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தாலும், தாய், தந்தையரை கண்டு கொள்வதில்லை. லட்சுமணன் அதே ஊரில் கிடைக்கும் வேலைகளை செய்து சம்பாதித்து வருகின்றார். மனைவி வள்ளியம்மாள், ஆடு மேய்க்கும் தொழில் செய்துவருகிறார். அன்றாடம் காட்சியான இந்த வயதான தம்பதி யாரையும் எதிர்பார்க்காமல் தங்கள் வாழ்வை நடத்தி வந்தனர். திடீர் சோதனையாக வள்ளியம்மாளின் காலில் ஒரு காயம் ஏற்பட்டது.

சின்ன காயம்தானே , ஆறிவிடும் என நினைத்தார்கள். ஆனால் காயம் நாளுக்கு நாள் அதிகமாகி, கால் அழுகிய நிலையில் இருக்க அருகில் உள்ள அரசு மருத்துமனைக்கு சென்றனர். மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள் கால் சரியாகிவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்துவிட்டு, வழங்க வேண்டிய சிகிச்சை பற்றி கூறிச் சென்றுவிடுவர். அதன் பின்னர் வள்ளியம்மாளை வீல் சேரில் அழைத்துச் சென்று மருந்து போட வேண்டும்.

ஆனால் அங்கிருந்த ஊழியர் பழனி, வீல் சேரில் அழைத்துச் செல்லவும், கட்டு போடுவும் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை லஞ்சம் கேட்டிருக்கிறார். லஞ்சம் கொடுக்க பணம் இல்லாததால், கட்டு போடுவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்கள் மருத்துவமனை ஊழியர்கள் . ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தால்தான் கட்டுப்போடுவோம் என மிரட்டியுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியராக இருந்தாலும், மருத்துவராக இருந்தாலும் மக்களிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் மருத்துவமனை ஊழியர்களோ லஞ்சம் கேட்பதில் குறியாக இருந்துள்ளனர். வேலைக்கு சென்று கிடைக்கும் பணத்தை கொண்டு வாழ்க்கை நடத்தும் வயதான தம்பதியிடம், லஞ்சம் கேட்டு தங்கள் கொடூர முகத்தை காட்டியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா? ஊழியர்களின் இந்த அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....


Next Story

மேலும் செய்திகள்