அக்கவுண்ட்டில் திடீரென வந்த ரூ.100 கோடி.. தூக்கத்தையே தொலைத்த கூலி தொழிலாளி - பின்னணியில் ரூ.2000 நோட்டுகள்?

x

மேற்கு வங்க மாநிலத்தில் கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் திடீரென 100 கோடி ரூபாய் டெபாசிட் ஆனது, வங்கி ஊழியர் ஆரம்பித்து, சைபர் கிரம் போலீசார் வரை கிறங்கடித்துள்ள நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம்...

ஊரையே கூட்டி பஞ்சாயத்து வைத்து, 10 லட்ச ரூபாய் அபராதம் கேட்கும் வில்லன்களிடம், அபராதமா.. நானே பத்து பைசாக்கு வழியில்லாம இருக்கேன் என்கிட்ட அபராதம் கேக்குறீங்க என வடிவேல் சண்டையிடும் நகைச்சுவை காட்சிகள் நமக்கு நினைவிருக்கும்...

இப்படி, வங்கி கணக்கில் வெறும் 17 ரூபாய் மட்டுமே வைத்திருந்த மேற்கு வங்காளத்தை முகமது நசிருல்லா என்பவரின் வீட்டின் கதவை சைபர் கிரைம் போலீசார் மற்றும் வங்கி ஊழியர்கள் தட்டியுள்ளனர்...

கதவை திறந்த அவர், வெளியே சைபர் கிரைம் போலீசாரும், வங்கி அதிகாரிகளும் படையெடுத்து நின்று கொண்டிருப்பதை கண்டு விழி பிதுங்கி போயுள்ளார்...

என்ன சார்... என்ன விஷயம்... நான் தவறேதும் பண்ணலையே என பதறிபோன அவரிடம், உங்களுடைய வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது அதுகுறித்து விசாரணை நடத்த வந்துள்ளோம் என அவர்கள் தெரிவிக்கவே அவர் உறைந்துபோயுள்ளார்..

தான் ஒரு கூலித்தொழிலாளி எனவும், தனது வங்கி கணக்கில் 17 ரூபாய் மட்டுமே உள்ளதெனவும், 100 கோடி ரூபாய் டெபாசிட் ஆவதற்கு வாய்ப்பே இல்லை என வாதிட்ட அவர், தனது செல்போனின் ஜிபே கணக்கை அடிக்கடி செக் செய்த போது அது ஒவ்வொரு முறையும் 100 கோடி என பேலன்ஸ் காட்டியதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்...

இந்த சூழலில், அவரின் வங்கி கணக்கை அதிகாரிகள் முடக்கிய நிலையில், பாஸ் புக்குடன் வங்கிக்கு சென்ற முகமது நசிருல்லா, தன்னால் இதை நம்ப முடியவில்லை எனவும், தனது வங்கி கணக்கு முடக்கப்படுவதற்கு முன் வெறும் 17 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும், இந்த செய்தியால் என்னுடைய தூக்கமே போச்சு என புலம்ப ஆரம்பத்திருக்கிறார்..

இந்நிலையில், இது குறித்த விசாரணைக்கு வரும் 30ஆம் தேதி ஆஜராகும் படி முகமது நசிருல்லாவுக்கு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை உருவாக்கியது...

சமீபத்தில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், திடீரென ஒருவரின் வங்கி கணக்கிற்கு 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது அதிகாரிகளை ஸ்தம்பிக்க செய்து சந்தேகமடைய செய்துள்ளது...

இதன் பின்னணி என்ன... கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்தது யார்... உள்ளிட்டவை குறித்து போலீசார் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்