ஆர்.கே.சுரேஷும் ஆருத்ரா வழக்கும்.. ரூசோ கொடுத்த வாக்குமூலம்“ - ஆர்.கே.சுரேஷுக்கு வேறு வழியே இல்லை“

x

சென்னையை தலைமை இடமாகக் கொண்ட ஆருத்ரா நிதி நிறுவனம் பொதுமக்கள் தங்களிடம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் கிட்டத்தட்ட 2438 கோடி ரூபாய் வரை முதலீடாக பெற்று மோசடியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர், மைக்கேல் ராஜ் உள்ளிட்ட 21 பேர் வழக்கு பதிவு செய்தனர். இதில் இதுவரை 13 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆருத்ரா நிதி நிறுவனத்தின் முகவரும், தொழிலதிபருமான ரூசோ வை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில, நடிகரும் பாஜகவின் மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் இயக்கும் படத்தை ரூசோ தயாரித்து தெரியவந்தது

இதன் தொடர்ச்சியாக ஆருத்ரா நிதி நிறுவனம் மூலமாக பெறப்பட்ட பணத்தை நடிகர் சுரேஷுக்கு கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் ரூசோவிற்கும் ஆர்.கே.சுரேஷ் இடையே ஏராளமான பண பரிவர்த்தனை நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக நடிகர் ஆர் கே சுரேஷ் பொருளாதாரக் குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கடந்த ஐந்து மாதமாக துபாயில் இருந்து வருவதாக கூறப்படும் ஆர் கே சுரேஷ் தற்போது வரை விசாரணைக்கு ஆஜராகவில்லை.. மேலும் இந்த வழக்கிலிருந்து விலக்கு வேண்டும் என கோரி உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 50 பக்க குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் முதற்கட்டமாக தாக்கல் செய்தனர்.. இதில் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் நிர்வாகிகள் உட்பட 40 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் கைது செய்யப்பட்ட ரூசோ சுமார் 15 கோடி ரூபாய் வரை நடிகர் ஆர் கே சுரேஷுக்கு கொடுத்திருப்பதாக அளித்த வாக்குமூலமும் குற்ற பத்திரிக்கையில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர் விசாரணையில் ஆர்கே சுரேஷினுடைய வங்கி கணக்கு விவரங்கள் முழுவதுமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அவருடன் யாரெல்லாம் பணப் பரிவர்த்தனை செய்தார்கள் என்ற விவரங்களும், அவருடைய அலுவலகத்தில் பணி புரிந்த அலுவலர்கள் ஆகியோரிடமும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர்..

ஆருத்ரா நிறுவனத்தின் முகவர்களாக செயல்பட்ட சுமார் 500 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்ப உள்ளதாகவும் அவர்கள் வைத்துள்ள சொத்துக்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலமாக மொத்தம் 800 கோடி வரை முதலீடுகள் திரட்டப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆருத்ரா நிதி நிறுவனத்தில் சோதனை நடத்தி கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், வங்கி கணக்குகள் பத்திரங்கள் ஆகியவற்றை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்