பிணியில்லா வாழ்வு தரும் ராமநாதசாமி... நோய் நொடியில்லா வாழ்வளிக்கும் ஆலயம் - ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் சிறப்புகள்

x

அனைத்து பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலின் சிறப்புகளை தினம் ஒரு தரிசனம் பகுதியில் காணலாம்...

நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களிலேயே தமிழகத்தைச் சேர்ந்த ஒரே தலம்... ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை ராமன் போக்கிக் கொண்ட திருத்தலம் தான் இந்த தேவாரம் பாடப் பெற்ற பாண்டிய நாட்டின் ராமநாதசாமி ஆலயம்...

நாட்டின் கடைக்கோடியான ராமேசுவரத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்கு ஓரு அருமையான வரலாறு உண்டு...

ராமாயணத்தில் சீதையை இலங்கைக்குக் கவர்ந்து சென்ற ராவணனைக் கொன்று தனது ஆருயிர் மனைவியை மீட்டார் ராமன்...

சிவ பக்தரான ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க ராமேசுவரம் கடற்கரையில் ராமன் சிவ பூசை செய்ய நினைத்து, சிவலிங்கம் கொண்டுவர அனுமனை அனுப்பினார்...

அவர் வர சிறிது தாமதமானதால், சீதை கடற்கரை மணலிலேயே லிங்கம் அமைக்க, அதை ராமர் பூஜித்ததால் மூலவருக்கு ராமநாதசுவாமி எனவும், ஊருக்கு ராமேசுவரம் எனவும் பெயர் வந்தது...

காசி ராமேசுவரம் யாத்திரை செல்லும் பக்தர்கள் முதலில் ராமேசுவர அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, அங்குள்ள மணலையும், புனித நீரையும் எடுத்துக் கொண்டு காசி சென்று, கங்கை தீர்த்தத்தில் மணலைப் போட்டு விட்டு, அக்னி தீர்த்தத்தால் காசி விசுவநாதரை நீராட்டுவார்கள்...

பிறகு காசியில் இருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து இங்கே ராமநாதசாமியை நீராட்டினால் அனைத்து பாவங்களும் நீங்கி புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை...

இக்கோயிலின் கர்ப்ப கிரகத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட படிக லிங்கத்தை நாள் தோறும் காலை 5 மணி முதல் 6 மணி வரை பாலால் திருமுழுக்காட்டினால் எண்ணிலடங்கா பாவங்கள் நிவர்த்தியாகும்...

கோயிலின் முன்பே கன்னிமூல கணபதியும், அவரது சகோதரன் முருகனும் நமக்கு அருள்பாலிக்க, அருகிலேயே நந்தி பகவானும் பிரம்மாண்டமாக வீற்றிருக்கிறார்...

தொடர்ந்து உள்ளே சென்று கொடி மர தரிசனம் கண்டு, பிறகு ராமநாதசாமியின் அருளில் நனையலாம்...

சூரியன் உதிப்பதற்கு முன்பே அக்னி தீர்த்த கடற்கரையிலும், ஆலயத்தில் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடிய பின்பு சாமியை வழிபட்டால் செய்யும் செயலில் நிகழும் தடைகள் அகலும்... நோய் நொடியில்லா வாழ்வமையும்...

இங்கு குடிகொண்டுள்ள பர்வத வர்த்தினி அம்மனின் பீடத்திற்குக் கீழே அமைந்துள்ளது திருச்சக்கரம்... சக்தி பீடங்களில் இத்தலம் சேது பீடம்...

முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதியும் அமைந்துள்ளது...

சாமி சன்னதிக்கு அருகிலேயே பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்களால் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராஜர் அருள் பாலிக்கிறார்...

நாக வடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக் கொண்டால் யோக கலையில் தேர்ச்சி பெறுவதுடன், நாக பாவமும் நீங்கும் என்பது நம்பிக்கை...

இக்கோயிலின் யானை பெயர் ராமலட்சுமி... முக்கிய விழா நாட்களில் எல்லாம் இத்தலம் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்...

1212 தூண்கள்... 690 அடி நீளம்... 435 அடி அகலம்... 22 அடி உயரம் கொண்ட இத்தலத்தின் 3ம் பிரகாரம் உலகப் பிரசித்தி பெற்றது...

கோயிலின் நடையானது காலை 4.30 மணியில் இருந்து மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்...

மதுரையில் இருந்து 161 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இந்த கோயில்...

ஆதியந்தம் ஆன அரியதோர் நமசிவாய நாமத்தைக் கூறி, ராமனே பூஜித்த ஈஸ்வரனை நாமும் வணங்கி நாளும் வேண்டும் வரம் பெறுவோம்...


Next Story

மேலும் செய்திகள்