மளிகை சாமான் கொடுத்தால் தங்கம் கிடைக்கும்... எக்ஸ்செஞ்ச் ஆப்பரால் கொழிக்கும் கடத்தல் தொழில்...

x

மஞ்சள், காய்கறின்னு நம்ம அண்ணாச்சி கடை மளிகை சாமான கொடுத்தா, அதுக்கு exchange-ஆ அயல்நாட்டு தங்கம் கிடைக்கும்னு

சொன்ன யாராச்சும் நம்புவீங்களா ? நீங்க நம்பலனாலும் அது தான் நெசம்.

இது ஏதோ சம்மர் ஆப்பர் இல்லீங்க... ராமேஷ்வரத்தோட smuggling ஸ்டோரி.


கடலோர காவல் படையிடம் சிக்கிகொள்ளாமல் கடத்தல் பொருட்களை படகிற்கு அடியிலேயே கடத்தி செல்லும் ராஜதந்திரங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நாயகன் திரைப்படத்திலேயே இடம்பெற்று இருக்கும்...


கடத்தல்காரர்களின் இந்த தந்திரம் மந்திரமெல்லாம், தற்போது கடற்படையினரிடம் எடுபடுவதில்லை. ஒருமுறை மாட்டினாலே டவுசரை கழட்டி சோதித்துவிட்டு தான் அனுப்புவார்கள்.இந்நிலையில், இலங்கையிலிருந்து கிலோ கணக்கில் தங்கத்தை கடத்தி வந்த ஒரு கூட்டம் அதனை, ஒட்டு மொத்தமாக கடலிலேயே வீசி இருக்கிறது.


கடத்தல் பாய்ஸ் திடீரென கேஜிஎப் ராக்கிபாய்யாக மாறியது ஏன்?

சில நாட்களுக்கு முன் ராமேஷ்வரம் கடலோர காவல் படையினருக்கு மத்திய வருவாய் புலனாய்வு துறையினரிடமிருந்து ஒரு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

இலங்கையிலிருந்து மண்டபம் கடல் மார்க்கமாக ஒரு படகு முழுவதும் கிலோ கணக்கில் தங்கம் கடத்தி வரும் தகவல் தான் அது...

உடனடியாக சந்தேகத்திற்கிடமான ஒரு நாட்டு படகினை வழிமறித்த அதிகாரிகள், அதிலிருந்த முகம்மது நாசர் மற்றும் அவரின் கூட்டாளிகளிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணை அதிகாரிகளிடம் ஏற்கனவே கடத்தல் தங்கம் குறித்த குழு தகவலும் இருந்ததால் குற்றத்தை ஓப்புக்கொண்ட கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வரப்பட்டது உண்மை தான் ஆனால் அதனை சோதனைகளுக்கு பயந்து கடலுக்குள்ளேயே வீசிவிட்டதாக கூறியிருக்கிறார்கள்..

கடத்தல்காரர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் ராமேஷ்வரத்திற்கு அருகிலிருந்த தீவில் பதுக்கிவைத்திருந்த 20 கிலோ தங்கத்தை சுங்கவரித்துறையினர் மீட்டிருக்கிறார்கள். அதோடு கடலில் வீசி எறியப்பட்ட தங்கத்தை தேடி ஸ்கூபா வீரர்கள் கடலில் குதித்திருக்கிறார்கள்.

ராமேஷ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரை 22 சிறிய தீவுகள் உள்ளது. அங்கு மீனவர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த தீவுகள் தான் தற்போது கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறி இருக்கிறது.

தற்போது இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிகளாலும் பண வீக்கத்தாலும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. அதன் காரணமாக தமிழகத்திலிருந்து படகில் மள்ளிகை பொருட்களை கொண்டு சென்று அதற்கு கைமாறாக இலங்கையிருந்து தங்கத்தை கடத்தி வரும் போக்கு தற்போது அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள்.

ஏற்கனவே ராமேஷ்வரம் கடல் மார்க்கமாக கஞ்சா, கடல் அட்டை கடத்தும் மாபியா கும்பலுக்கு மத்தியில் தற்போது இலங்கையின் பொருளதார நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு சாமானிய மக்களும் அத்தியவாசிய பொருட்களை கடத்தி சென்று தங்கமாக அதனை கைமாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை கைது செய்து விசாரித்து வரும் நிலையில் கடலில் வீசப்பட்ட தங்கத்தை ஸ்கூபா வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


தற்போது நடந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரிடம் விசாரணை நடந்து வந்த நிலையில், கடலில் வீசப்பட்ட தங்கத்தையும் இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு ஸ்கூபா வீரர்கள் பத்திரமாக மீட்டிருக்கிறார்கள். எனினும் மொத்தம் எத்தனை கிலோ தங்கம் கடலில் வீசிய எறிப்பட்டது என்பது இன்றளவும் புரியாத புதிராகவே நீடிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்