ரூல் 267 Vs ரூல் 176... மணிப்பூர் வன்முறையை விவாதிக்க மறுக்கும் ராஜ்யசபா - அதிர்ந்த நாடாளுமன்றம்

x

மணிப்பூர் கலவரத்தை தொடர்ந்து, பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி நாடாளுமன்றத்தை உலுக்கி வருகிறது. மணிப்பூர், மணிப்பூர் என எதிர்க்கட்சிகள் கோஷம் முழங்க நாடாளுமன்ற இரு அவைகளும் முதல் நாளிலேயே முடங்கியது. இது இரண்டாவது நாளும் எதிரொலித்தது.

இதில் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் விதி எண் 267-ன் கீழ் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. ஆனால், விதி எண் 176-ன் கீழ் விவாதிக்க தயாராக இருப்பதாக சொல்கிறார் அவை தலைவர் ஜெகதீப் தன்கர்... இப்போது எதிர்க்கட்சிகள் கோரும் மாநிலங்களவை விதி எண் 267-ன் கீழ், மாநிலங்களவை எம்.பி.க்கள் அன்றைய தினம் அவையில் பட்டியலிடப்பட்டிருக்கும் அனைத்து நடவடிக்கையும் ஒத்திவைக்க கோரலாம்.பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசரப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த நோட்டீஸ் வழங்கலாம். இந்த கோரிக்கையை அவை தலைவர் ஏற்றால் மட்டுமே, எம்.பி. ஒருவர் குறிப்பிடும் விவகாரம் தொடர்பாக விவாதங்கள் நடைபெறும்.

எதிர்க்கட்சிகள் விதி எண் 267-ன் கீழ் விவாதிக்க வலியுறுத்துவதற்கு காரணம், இந்த விதியின் கீழ் நடைபெறும் எந்தவொரு விவாதமும் நாடாளுமன்றத்தில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது; ஏனென்றால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை குறித்து விவாதிக்க மற்ற அனைத்து அலுவல்களும் நிறுத்தி வைக்கப்படும். விவாதத்தின் போது அரசும் பதிலளிக்க வேண்டும். இப்போது அரசு விதி எண் 176-ன் கீழ் குறுகிய கால விவாதத்திற்கு ஏற்பதாக தெரிவிக்கிறது.

இந்த விதியின் கீழ் விவாதிக்கும் போது ஒரு பிரச்சினை குறித்து அதிகப்பட்சமாக இரண்டரை மணி நேரங்கள் விவாதம் செய்யலாம். நோட்டீஸ் விரைவாக அதாவது உடனடியாகவோ, மறுநாளோ விவாதத்திற்கு ஏற்கப்படலாம். இருப்பினும் இந்த குறுகிய கால விவாதத்தில் பிரச்சினை தொடர்பாக எந்த தீர்மானமோ அல்லது வாக்கெடுப்போ நடைபெறாது.விதி எண் 176-ன் கீழ் விவாதம் நடைபெறும் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிப்பார் என அரசு தரப்பு சொன்னாலும் மத்திய பாஜக அரசு விதி எண் 267-ன் விவாதிப்பதை முற்றிலும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்