இந்த ஒரு நிலைப்பாட்டில் மட்டும் பாஜக அரசுக்கு ராகுல் காந்தி ஆதரவு

x

அமெரிக்காவில் ராகுல் ஆற்றிய உரை பாஜகவினரை கொந்தளிக்க செய்துள்ள நிலையில், ராகுலின் அமெரிக்க பயணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தான் மேற்கொண்ட 'பாரத் ஜடோ' யாத்திரையை முடித்த கையோடு... கடந்த மார்ச் மாதம் ராகுல் மேற்கொண்ட இங்கிலாந்து பயணம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்து... பெரும் புயல் வீச காரணமானதை மறப்பதற்கு இல்லை.

ஒருபுறம் உலக தலைவராக பிரதமர் மோடி முன்னிறுத்தப் பட்டு வரும் நிலையில்...மறுபுறம் வெளிநாட்டு மண்ணில் பிரதமரை இழிவு படுத்துவதையே வேலையாக வைத்திருக்கிறார் ராகுல் என கொந்தளிக்கின்றனர், பாஜகவினர்.

அப்போ இங்கிலாந்து... இப்போ அமெரிக்கா... இடம் தான் மாறி இருக்கிறதே தவிர.. மோடி அரசு மீது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டு கள் மாறவில்லை...அதனை தொடர்ந்து பற்றி எரியும் அரசியல் தனல் தணிந்த பாடில்லை.

அடுத்த மாதம் பிரதமர் மோடியும் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், தம் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் எம்பி பதவி பறிபோன பிறகு ராகுல் காந்தி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது.

தம்மிடமிருந்து தூதரக ரீதியிலான அந்தஸ்து கொண்ட சிறப்பு பாஸ்போர்ட் பறிக்கப்பட்டதை அடுத்து, தற்போது சாதாரண பாஸ்போர்ட் மூலம் நியூயார்க் வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியா ஆகிய மூன்று அமெரிக்க நகரங்களுக்கு 10 நாள் பயணம் மேற்கொண்டு இருக்கிறார் ராகுல்.

ஏற்கனவே இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தாம் பேசியவற்றிற்கு மன்னிப்பு கோருமாறு ராகுல் காந்தியை பாஜகவினர் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் ராகுல் என்ன பேசி உள்ளார் தெரியுமா?

தமக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை கொண்டவர் பிரதமர் மோடி என்றும் அவர் அருகே கடவுள் உட்கார்ந்தால் கடவுளுக்கே பிரபஞ்சம் எப்படி இயங்கும் என பாடம் நடத்தக் கூடியவர் மோடி என்று ராகுல் முன் வைத்துள்ள கடும் விமர்சனமே தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

கூடவே பாஜக அரசால் இந்தியாவில் மக்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், சிறுபான்மையினர் தாக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விலைவாசி உயர்வு வேலையில்லா திண்டாட்டத்தை மறக்கவே செங்கோல் என்று விமர்சித்துள்ள ராகுல், தனது பாரத் ஜடோ யாத்திரையை பலமுறை தடுக்க பாஜக அரசு முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி அவதூறு வழக்கில் தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து மனம் திறந்த ராகுல் காந்தி இதனை தான் எதிர்பார்க்கவே இல்லை என்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதே மக்களுக்கு மேலும் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பாகவே பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

இளம் தொழிலாளர்களுக்கு மத்தியில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவில் டேட்டா பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதையும், அரசு ஒருவரது உரையாடல்களை ஒட்டு கேட்க முடிவு செய்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தெரிவித்ததோடு, தனது ஐபோன் ஒட்டு கேட்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே முன்பு நான் ஒரு தமிழன் என்று கூறிய ராகுல் காந்தி இம்முறை தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை தான் ஒருபோதும் ஏற்க மாட்டேன் என அமெரிக்காவில் பேசியிருக்கிறார்.

இந்தியா சீனாவிற்கு இடையேயான உறவு கடுமையாக்கி கொண்டு வருவதாக கோடிட்டு காட்டிய ராகுல் காந்தி,

அதே வேளையில் ரஷ்ய - உக்ரைன் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை உலகமே பாராட்டி வரும் நிலையில், பாஜக அரசின் நடுநிலை நிலைப்பாட்டை தாம் ஆதரிப்பதாகவும் கூறி இருக்கிறார் ராகுல் காந்தி.


Next Story

மேலும் செய்திகள்