நம்பிக்கை துரோகத்துக்கு இரையான புதின்.. முதுகில் குத்திய வளர்த்த கிடா.. மூளையை குடையும் புதினின் சமையல்காரர்

x

ரஷ்யா ராணுவத்திற்கு சவாலாகிய ப்ரிகோஜின் யார்..? என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

வழுக்கையான தலை... உடல் முழுவதும் ஆயுதம் என ஹாலிவுட் பட சைலண்ட் வில்லன் போல் காட்சியளிக்கும் இவர்தான் எவ்ஜெனி ப்ரிகோஜின். இன்று உலக அரசியலில் இவரைப் பற்றிதான் பேச்சு... ஆம் ரஷ்ய ராணுவத்திற்கே தில்லாக சவால்விட்டு ரஷ்யாவிற்குள்ளே வளம்வருகிறார் என்றால் சும்மாவா....

எவ்ஜெனி ப்ரிகோஜின்... எதோ புதிதாக கேட்கும் பெயராக தெரியலாம். ஆனால், ரஷ்யாவை எதிர்த்தால் அவர் டெரராகிவிடுவார். 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியாவை ரஷ்யா கைப்பற்ற இவரே உதவியதாக மேற்கத்திய நாடுகள் தெரிவித்தன... அப்படியென்றால் ராணுவ அதிகாரியா என்றால் இல்லை.. ரஷ்யாவின் வாக்னர் எனப்படும் தனியார் ராணுவத்தின் தலைவர்...இதை கூலிப்படை என்றே அழைக்கின்றனர் ரஷ்யர்கள்.

புதினின் சமையல்காரராக க்ரெம்ளினுக்குள் நுழைந்தவர்... நாளடைவில் புதினின் நம்பிக்கையை பெற்று ரஷ்யாவை எதிர்ப்பவர்களை எல்லாம் நசுக்குபவராக அறியப்பட்டார். ரஷ்ய சிறை கைதிகளை எல்லாம் நாட்டை காப்பவர்களாக பயிற்சி அளிப்பதே அவரது டாஸ்க்...

இப்போது உக்ரைனில் நடக்கும் போரில் முன் களமிறங்கிய படை வாக்னர் கூலிப்படையே... கொடூரமான தாக்குதலுக்கு பெயர் போன இந்த கூலிப்படை ரஷ்ய படைகளுக்கு பாதுகாவலாகும், உக்ரைனிய படைகளுக்கு எமனாகவும் களத்தில் மல்லுக்கட்டியது. இதற்கெல்லாம் மூளை எவ்ஜெனி ப்ரிஜோஜின்.. புதினின் தனிப்படை என்றெல்லாம் பேசப்பட்டது.

வாக்னர் ராணுவம், வடகொரியாவிடம் இருந்து எல்லாம் ஆயுதங்களை கொள்முதல் செய்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து மேற்கத்திய நாடுகள்...

இப்போது உக்ரைனின் பெரும்பகுதியை வாக்னர் படையே ரஷ்யாவிடம் பெற்று கொடுத்தது என்ற பேச்சும் இருந்தது. இப்படி புதினின் செல்லப்பிள்ளையாக சுற்றிய வாக்னர் படை அவருக்கே சவாலாகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது...

இவ்வளவு நாளும் வாக்னர் கூலிபடைக்கு ரஷ்ய ராணுவமே ஆயுதங்களை வழங்கி வந்தது. இப்போது, ராணுவ தலைமை சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் ப்ரிகோஜின்...

உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவமே தனது தலைமையிலான கூலி படையினரை கொன்று குவித்ததாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதை ராணுவம் மறுத்தாலும், ராணுவ தலைமையை மாற்ற வேண்டும் என உக்கிரம் அடைந்தார் ப்ரிகோஜின்...

ராணுவத்தை கவிழ்க்க தன்னிடம் 25 ஆயிரம் பேர் இறக்கவும் தயாராக இருப்பதாக ப்ரிகோஜின் வெளியிட்ட மிரட்டலின் விளைவு ரஷ்யாவில் உள்நாட்டு போர் என தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆம் அவரது கூலிப்படை உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்யாவின் Rostov-on-Don நகரை பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளது. மாஸ்கோவை நோக்கி கூலிப்படை படையெடுக்கும் என ப்ரிகோஜின் அறிவிக்க ஒட்டுமொத்த ரஷ்யாவிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராணுவ டாங்கிகள் மாஸ்கோ எல்லைகளை பாதுகாக்கும் காட்சிகளும் வெளியாகியிருக்கிறது.

வாக்னர் ராணுவம் துரோகித்துவிட்டதாக கூறியிருக்கும் அதிபர் புதின், எவ்ஜெனி ப்ரிகோஜின் தண்டிக்கப்படுவார் எனக் கூறியிருக்கிறார். புதினை நேரடியாக எதிர்க்கவில்லை என்றாலும் ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கிய எவ்ஜெனி ப்ரிகோஜின் நடவடிக்கையால் ரஷ்யா பரபரப்பாக காணப்படுகிறது.

எவ்ஜெனி ப்ரிகோஜினால் பெரிதாக ஆபத்து இல்லை என சொல்லப்பட்டாலும், வளர்த்த கிடா மார்பில் பாய்வது போல், புதின் ஆசை ஆசையாக வளர்த்தவரே அவருக்கு சவால் விட்டிருப்பது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்