பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி.. ஐரோப்ப நாடாளுமன்றம் கொடுத்த அதிர்ச்சி - கொதித்து போன இந்தியா

x

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

கல்வீச்சு, தடியடி, தீ வைப்பு, படுகொலைகள் என கடந்த மே மாதம் முழுவதும் கலவரக்காடாக காட்சியளித்து வடகிழக்கு மாநிலமான மணிப்பூர். ராணுவம், போலீசாசாரின் பல கட்ட நடவடிக்கைக்கு பிறகு அங்கு இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றார். பிரதமரின் பிரான்ஸ் பயணத்தின் போது, ஒரு புறம் (Strasbourg) ஸ்ட்ராஸ்போர்க் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதில் மணிப்பூரில் நடைபெறும் கலவரம் சிறுபான்மை யினரை ஒடுக்கும் முறையிலும், மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்று வருவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்வதோடு, கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் சர்ச்சைக்குரிய விதத்தில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை மாநிலத்திலிருந்து திரும்பப்பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்ட விவகாரம் உலகளவில் விவாதத்திற்குள்ளாகியது.

ஐரோப்பா தீர்மானம் நிறைவேற்றியது குறித்து பேசிய, வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் ஐரோப்பா நாடாளுமன்றம் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றுவது காலனித்துவ மனநிலையை பிரதிபலிப்பதாக கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, மணிப்பூர் பற்றி எரிகிறது என்றும் இந்த உள்நாட்டு விவகாரத்தை ஐரோப்பிய யூனியன் விவாதித்துக் கொண்டிருக்கும் சூழலில் பிரதமர் மோடி இதுகுறித்து ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை" என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ரபேல் ஒப்பந்தம் தான் பிரதமர் மோடிக்கு பிரான்சின் தேசிய தின நிகழ்வில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கி இருப்பதாக விமர்சித்துள்ளார்.

இதனை கண்டு கொந்தளித்த மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி, இந்தியாவின் உள்விவகாரங்களில் ராகுல் காந்தி சர்வதேச நாடுகளின் தலையீட்டை விரும்புவதாக விமர்சித்தார்.

ஏற்கனவே பிரட்டனில், இந்தியாவில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக பாஜக அரசை விமர்சித்து ராகுல் காந்தி பேசியிருந்தது, கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போதைய ட்விட்டும் பாஜகவினரை சீண்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்