"BCCI-க்கு அரசியல் அழுத்தம்?..worldcup-ல் தென் இந்தியா புறக்கணிப்பு?" -அரசியல் தலைவர்கள் விமர்சனம்

x

இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை, போட்டி தொடங்க 100 நாட்கள் இருக்கும் வேளையில் வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பங்கேற்குமா? என்ற குழப்பம், மழை சீசனுக்கு ஏற்ப ஆட்டங்களுக்கான இடங்களை தேர்வு செய்வதிலும் சிக்கல், போன்ற காரணங்களால் அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. காலதாமதமாக வெளியாகியிருக்கும் அட்டவணையில் எங்க ஊரு மைதானம் இல்லை என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளன பல மாநிலங்கள். லீக் போட்டி மைதானங்கள் லிஸ்டில் திருவனந்தபுரம், மொகாலி, இந்தூர், ராஞ்சி இடம்பெறாதது அந்த ஊர் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

திருவனந்தபுரம் மைதானத்தில் போட்டி நடைபெறாதது கவலை அளிப்பதாக கூறியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், அகமதாபாத் இந்தியாவின் கிரிக்கெட் தலைநகராகி வருகிறது, இருந்தாலும் ஓர் இரண்டு ஆட்டங்களை திருவனந்தபுரத்தில் வைத்திருக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளார். ராஞ்சி, மொகாலியிலும் போட்டியை நடத்த வாய்ப்பளித்து இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மறுபுறம் மொகாலி இடம்பெறாததற்கு அரசியல் அழுத்தமே காரணம் என குற்றம் சாட்டியிருக்கிறார் பஞ்சாப் விளையாட்டுத்துறை அமைச்சர் குர்மீத் சிங்...இதில் சசிதரூர் குற்றச்சாட்டுக்கு எல்லாவற்றுக்கும் தெற்கே மட்டும் கவனம் செலுத்த முடியாது என பிசிசிஐ தரப்பு தகவல்கள் பதில் அளிக்கிறது.

10 மைதானங்களில் போட்டி நடக்கும் சூழலில், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறும் பிசிசிஐ அதிகாரிகள் தரப்பு, சசிதரூர் திருவனந்தபுரத்தில் போட்டியை நடத்த விரும்பினால் மைதானத்தை முதலில் மாநில கிரிக்கெட் வாரிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரட்டும் என தெரிவிக்கிறார்கள். இதற்கிடையே மொகாலியில் உள்ள தற்போதைய மைதானம், ஐசிசி நிர்ணயம் செய்திருக்கும் தரத்தை பூர்த்தி செய்ய வில்லை என பதில் அளித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா... மைதானங்கள் இறுதி செய்வதில் ஐசிசி ஒப்புதல் முக்கியமானது எனக் குறிப்பிடும் ராஜீவ் சுக்லா, திருவனந்தபுரத்தில் முதல் முறையாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளது எனவும் போட்டிகள் நடைபெறுவதில் எந்த பிராந்தியமும் புறக்கணிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கவுகாத்தியில் கூட பயிற்சி ஆட்டங்கள் நடப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்