காலை உடைத்தவர் கல்லைப் போட்டு கொலை.... ஜாமீனில் வந்தவரை காத்திருந்து பழிதீர்த்த கும்பல்...

x

கொல்லப்பட்டவர் கருணா, சென்னை அயனாவரத்தில் உள்ள குட்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர். 26 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு கருணாவின் தந்தையை சிலர் வெட்டிப்படுகொலை செய்திருக்கிறார்கள்.இதனால் குடும்ப சுமை அனைத்தையும் கருணாவே ஒற்றை ஆளாக தூக்கி சுமந்திருக்கிறார்.

பெரியதாக எதுவும் படிக்காத கருணாவின் கையில் இருக்கும் ஒரே சொத்து அவரது ஓட்டுநர் உரிமம் தான். அயனாவரத்தில் இருக்கும் ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளியில், டிரைவராக வேலை பார்த்து தான் குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றவரை ஒரு கும்பல் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாகக் கொலை செய்திருக்கிறது.கொலைக்கான காரணம் என்ன...? கருணாவைக் கொலை செய்யும் அளவுக்கு அந்த பகுதியில் யார் இருக்கிறார்கள்...? எனத் தேடிப்பார்த்த போது, காவல் துறையிலிருந்து கருணாவின் உறவினர்கள் வரை அத்தனைப்பேரும் உச்சரித்த ஒரே பெயர் யோனா. இதே பகுதியைச்சேர்ந்த யோனாவுக்கும் இறந்துபோன கருணாவுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. கடந்த ஓராண்டுக்கு முன்னதாக அந்த பகுதியில் நடந்த ஒரு துக்க வீட்டிற்கு தனது நண்பர்களோடு சென்றிருக்கிறார் கருணா.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலரோடு கருணாவுக்கு கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது யோனா வின் காலில் கருணா கல்லால் தாக்கி இருக்கிறார். இதனால் படுகாயமடைந்த யோனா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே கருணாவின் கையில் விலங்கை மாட்டி இருக்கிறார்கள் போலீசார்.

காலை உடைத்த வழக்கில் ஓராண்டு சிறையிலிருந்த கருணா சில நாட்களுக்கு முன்புதான் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்த விஷயம் யோனாவுக்கு தெரியவந்ததும் கருணாவைப் பழி தீர்க்க தீட்டம்போட்டிருக்கிறார்.சம்பவம் நடந்த அன்று தனது நண்பர்கள் 7 பேர் கொண்ட கும்பலோடு வந்த யோனா , தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த கருணாவை அடித்து கீழே தள்ளி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்திருக்கிறார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் யேனாவை தீவிரமாக தேடிவரும் நிலையில் அவரது கூட்டாளிகள் 7 பேரைக் கைது செய்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்