உக்ரைனுக்காக எலான் மஸ்குடன் கைகோர்க்கும் பென்டகன் - திடீரென போர்க்கொடி தூக்கிய எலான் மஸ்க்

x

உக்ரைனுக்காக எலான் மஸ்க் உடன் கைகோர்த்துள்ளது, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன். இந்த விவகாரத்தில் நடப்பது என்ன? என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

அண்மையில் தமிழகத்தில் கூட வானில் புள்ளி புள்ளியாக ரயில் போன்று காட்சியளித்த எலான் மஸ்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோளை கண்டு மக்கள் 'வாவ்' சொல்லிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

முதலில் ஸ்டார்லிங்க் என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பூமிக்கு அதிவேக இணைய சேவையை வழங்கும் திட்டம் தான் இந்த ஸ்டார்லிங்க் திட்டம். புவி வட்டபாதையின் குறைந்த உயரத்தில் இந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படுகின்றன.

ஸ்டார்லிங்க் திட்டத்தின் லட்சியம் நகரங்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்குவது அல்ல... மலைப்பகுதி உள்ளிட்ட இன்னும் உலகின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை கிடைக்காமல் அல்லாடும் மக்களுக்கும் இணைய சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான்.

ரஷ்ய படையெடுப்பின்போது உக்ரைனுக்கு பக்க பலமாக துணை நின்று கை கொடுத்தது, எலான் மஸ்கின் இந்த ஸ்டார்லிங்க் சேவை தான்.

உக்ரைனுக்குள் நுழைந்ததும் உக்ரைனின் இணைய சேவையை நிறுத்தி... சமூக வலைதள பக்கங்களை முடக்கி... தகவல் பரிமாற்றத்தை நிறுத்த துடித்தது ரஷ்யா.

இந்த இக்கட்டான சூழலில் தனது ஸ்டார்லிங்க் இணைய சேவையை உடனடியாக உக்ரைனுக்கு வழங்கினார், எலான் மஸ்க்.

பிற இணைய சேவையை போல் ரஷ்யாவால் ஸ்டார்லிங்க் இணைய சேவையை முறியடிக்க முடியவில்லை. தற்போது வரை ஸ்டார்லிங்கின் உதவியாலேயே உக்ரைன் ராணுவம் இணைய சேவையை பயன்படுத்தி வருகிறது.

தனியார் நன்கொடைகள் மற்றும் அமெரிக்க வெளிநாட்டு உதவி நிறுவனத்துடனான தனி ஒப்பந்தத்தின் கீழ் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உக்ரைனுக்கு இணைய சேவையை வழங்கி வரும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் திடீரென இதற்கு போர்க்கொடி தூக்கினார், எலான் மஸ்க்.

வெறும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கால வரையறையின்றி உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் இணைய சேவையை வழங்க முடியாது என்பதுதான் அது.

இணைய சேவையை வழங்க மாதம் 164 கோடி ரூபாய் வரை பராமரிப்பு செலவு மட்டுமே ஆவதாக அவர் கூறியிருந்தார்.

இதனால் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் எலான் மஸ்கிடையேயான உறவில் உரசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் தற்போது உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் சேவையின் மூலம் இணைய சேவையை வழங்க ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துட்டு இருக்கிறது பென்டகன்.

இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட எந்த தகவல்களும் வெளியிடப்படாத போதிலும், ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான முனையங்களை உக்ரைனுக்காக எலான் மஸ்கிடமிருந்து வாங்க இருக்கிறது, பென்டகன்.


Next Story

மேலும் செய்திகள்