ஒன்னறை வயது குழந்தைக்கு கை அகற்றம்...தவறான சிகிச்சை தான் காரணம் என குற்றச்சாட்டு

x

சென்னை வாழ் மக்களின் மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதில் முக்கிய இடத்தில் இருக்கிறது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை. வலியோடு வந்த பலருக்கு மறுவாழ்வு கொடுத்து அனுப்பிய இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லுக்கும் நன்றி சொல்லிச் சென்றவர்கள் ஏராளம், அப்படி நம்பிக்கையோடு தனது 1 1/2 வயது குழந்தையை அழைத்து வந்த பெற்றோர்கள், கடைசியில் கண்ணீரும் கம்பலையுமாக நின்று கொண்டிருக்கிறார்கள்.. 2 நாட்களுக்கு முன்பு வரை நன்றாக இருந்த குழந்தையின் கையை திடிரென அகற்ற வேண்டுமெனச் சொன்னதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் மருத்துவர்களோடு வாக்குவாதத்தில் ஈடு பட்டிருக்கிறார்கள்..

குழந்தை குறைபிரசவத்தில் பிறந்தது தான் பிரச்சனை என மருத்துவத்துறை ஒரு பக்கம், செவிலியர்களின் அலட்சியமே தவறுக்கு காரணமெனக் குற்றம் சாட்டும் பெற்றோர் மறுபுறம்.. ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் முகமது - மகீர் தம்பதி. கடந்த ஒன்னறை ஆண்டுகளுக்கு முன்னதாக இவர்களுக்கு முகமது மகீர் என்ற ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. 32 வாரத்தில் குறைப்பிரசவமாக பிறந்த அந்த குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்ததால் குழந்தையின் எடை மிகவும் குறைவாக இருந்தது. அடிக்கடி உடல் நலகுறைவு ஏற்பட்டு வந்த குழந்தைக்கு hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் சிகிச்சைக்காக, ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்கள்.

அப்போது அந்த குழந்தையின் மூளையில் நீர் கசிவை உறிஞ்சி எடுக்க VP shunt பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் சில மாதங்களிலேயே அந்த shunt வெளியே வந்திருக்கிறது. இதனால் மீண்டும் ஒரு புதிய shunt பொருத்தியிருக்கிறார்கள். அந்த அறுவை சிகிச்சையை தொடர்ந்து குழந்தைக்கு குளுக்கோஸ் போட கையில் ஊசியை ஏற்றியிருக்கிறார்கள். அது குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தியிருக்கிறது.குழந்தையின் கையை செவிலியர்களிடம் காட்டி உரிய சிகிச்சை அளிக்கச் சொல்லி இருக்கிறார் தாய் அஜிஸா. ஆனால் கருப்பாக மாறியிருந்த கையை பார்த்த பிறகும் அந்த செவிலியர் எந்த பதட்டமோ அக்கரையோ காட்டாமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

அடுத்த நாள் காலை ரவுண்ட்ஸ் வந்த மருத்துவர்களிடம் குழந்தையின் தாய் நடந்ததைக் கூறி இருக்கிறார். உடனே மருத்துவர்கள் குழந்தையின் கையை ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்கள். கை முழுவதுமாக அழுகிவிட்டது. இனி கையை அகற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை என மருத்துவர்கள் கை விரித்திருக்கிறார்கள்.

இரவிலிருந்து தனது குழந்தையின் கை மோசமாக மாறிக் கொண்டிருப்பதைப் பார்த்துத் பார்த்து துடித்த அஜிஸாவுக்கு மருத்துவர்களின் இந்த பதில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதனால் தனது உறவினர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார். அப்போது அங்கு வந்த அஜிஸாவின் உறவினர்கள், குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் அங்கிருந்த மருத்துவர்களும், காவல்துறை அதிகாரிகளும், குழந்தையின் பெற்றோர்களை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள். இறுதியாக பாதிக்கப்பட்ட குழந்தையை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்து, அறுவைசிகிச்சை மூலம் கை அகற்றப்பட்டிருக்கிறது.மருத்துவமனையின் அலட்சியமே, குழந்தையின் கை போனதற்கு காரணம் எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டி வரும் அதே வேளையில் குழந்தைக்கு ரத்தக்கட்டு ஏற்பட்டதாலேயே கை அழுகியதாக மருத்துத்வதுறை கூறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்