நயன்தாரா -விக்கி எடுத்த திடீர் முடிவு..சட்ட சிக்கலில் 'யார் பக்கம் பிழை'?நயனுக்கு ஏழரையான "9ம் தேதி"

x

ஜூன் 9ல் திருமணம்.. அக்டோபர் 9 ல் இரட்டை குழந்தைகள் என அறிவித்த விக்கி - நயன் ஜோடி மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது... திருமணமாகி நான்கே மாதங்களில் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது சாத்தியமா? சட்டம் என்ன சொல்கிறது?


சன்னி லியோன், பிரியங்கா சோப்ரா, ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி, அமீர்கான், ஷாருக்கான், துஷார் கபூர் என பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் இந்த சினிமா பிரபலங்கள் அனைவரும், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றவர்கள்தான்.

இந்த வரிசையில் இணைந்திருக்கிறது நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி... சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நயன்தாராவும், திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்த நிலையில், அக்டோபர் 9ம் தேதி இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக, இருவரும் பிஞ்சுக் குழந்தைகளின் கால் பாதங்களை முத்தமிட்டபடி, சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம்தான் தற்போது சினிமா வட்டாரத்தை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த இருவரின் திருமண நிகழ்ச்சியில், திரை நட்சத்திரங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், ரசிகர்கள் கண்டுகளிக்கும் வண்ணம் திருமண ஒளிபரப்பு ஒப்பந்தத்தை, நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்திருந்தது இந்த ஜோடி. இதுவரை திருமண நிகழ்வின், டிரெய்லரை மட்டுமே நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது மெயின் பிக்சராக குழந்தைகள் பிறப்பை அறிவித்திருக்கிறது நயன் - விக்னேஷ் ஜோடி.

திருமணமான 4 மாதங்களில் வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுப்பது சாத்தியமா? இதில் சட்டத்தில் இடம் உள்ளதா என்று பார்த்தால், இல்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

கருவை சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சேர்த்து, கருவை உருவாக்கி, வேறொரு பெண்ணின் மூலம் குழந்தையை பெற்றுத் தருவதே வாடகை தாய் என அழைக்கப்படுகிறது.

அதேபோல், திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவான நிலையில், வேறு விதமான நோய் பாதிப்பு மற்றும் கருத்தரிப்பதால், உயிருக்கு ஆபத்து உள்ளிட்ட காரணங்களால் மட்டுமே வாடகை தாய் உதவியுடன் குழந்தை பெற முடியும் என சொல்கிறது சட்டம்.அதுமட்டுமல்லாமல், தம்பதியின் உறவினர்களில் ஒருவரைத்தான் வாடகை தாயாக நியமிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

அப்படி என்றால் திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகாத நிலையில், நயன் - விக்னேஷ் சிவன் ஜோடி எப்படி வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றிருக்க முடியும், அப்படி என்றால் திருமணத்திற்கு முன்பே இருவரும் திட்டமிட்டு எடுத்த முடிவா? இதற்கு மருத்துவர்கள் எவ்வாறு சிகிச்சை அளித்திருக்க முடியும் என்ற பல்வேறு விதமான கேள்விகள் எழுந்துள்ளன.

காதல், திருமணம் என தொடர் சர்ச்சையில் சிக்கி வந்த நயன்தாரா இப்போது குழந்தை விவகாரத்திலும் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்... ஒருவேளை குழந்தையை தானே பெற்றுக்கொண்டால் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் சினிமா வாய்ப்புகள் பறிபோகும் என்ற எண்ணத்தில் இதை செய்திருக்கலாம் என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருந்தபோதிலும், அரசின் விதிமுறைகளை தம்பதி இருவரும் மீறி இருக்கிறார்களா என்பது குறித்தும், தம்பதி மேற்கொண்ட சிகிச்சை முறை குறித்தும், விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக நயன் - விக்னேஷ் ஜோடி மவுனம் கலைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...


Next Story

மேலும் செய்திகள்