கிங்டம் படத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு

x

ஈழத் தமிழர்களை குற்றப்பின்னணி உடையவர்கள் போல தொடர் சித்தரிப்பு...

கிங்டம் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு...

வரலாற்று திரிபை திட்டமிட்டு செய்வதாக குற்றச்சாட்டு..

கடந்த சில நாட்களாக Running Successfully, Box Office Block Buster,

100 Crore Collection என சோஷியல் மீடியாவில் கர்ஜித்த கொண்டிருந்த கிங்டம் திரைப்படத்தை தற்போது தமிழகத்தில் ஆட்டம் காண வைத்திருக்கிறார்கள்.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படம் தமிழகத்தில் “ஓடாது... ஓட கூடாது... ஓடவும் விடமாட்டோம் “ என கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியினர் போராடி வரும் நிலையில், இன்று பல திரையரங்குகளை முற்றுகையிட்டு அவர்களுடைய First Day First Show-வை அமைதியாக தொடங்கி உள்ளனர்.

கிங்டம் ரீலிஸாகியுள்ள திரையரங்குகளுக்கு சென்று இந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் ஈழத்தமிழர்களை இழிவுப்படுத்துவிதமாக காட்சிகள் அமைத்திருப்பதால் இந்த படத்தை திரையிட வேண்டாமென அறவழியில் மனு கொடுத்துள்ளனர்.

அதோடு, கிங்டம் திரைப்படத்தின் பதாகைகளையும் அகற்றி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.

பல திரையரங்குகளில் அமைதியாக போராடினாலும், ராமேஷ்வரம் போன்ற சில இடங்களில் அதிரடி ஆக்‌ஷனையும், அதை தொடர்ந்து கைது நடவடிக்கையும் பார்க்க முடிந்தது.

ஒருவேளை நாம் தமிழர் கட்சியினரின் வேண்டுகோளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் தம்பிகளின் அடுத்தடுத்த போராட்டங்கள் போர்க்களமாக இருக்குமோ என்கிற அச்சத்தையே தற்போது திரையரங்க உரிமையாளர்களுக்குள் விதைத்துள்ளது.

கிங்டம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்ப என்ன காரணம் ? என்பதை தெரிந்துகொள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தை ஆழமாக டிகோட் செய்தோம்.

ஜெர்ஸி படத்தின் இயக்குனர் கௌதம் தின்னனுரி நடிகர் விஜய் தேவரகொண்டாவை வைத்து கிங்டம் படத்தை எடுத்திருக்கிறார்.

இந்த திரைப்படம் ஜுலை 31 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

கிங்டம் திரைப்படத்தின் கதைப்படி, சிறு வயதிலயே அண்ணனை பிரிந்த கதாநாயகன் பெரியவன் ஆனதும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் அண்ணனை தேடி செல்வது போல கதைக்களம் அமைத்துள்ளனர்.

ஆனால், யாழ்ப்பாணத்திற்கு சென்ற பிறகு அண்ணனை தேடி சென்ற கதை அங்கிருந்து ஷிப்ட்டாகி ஒரு இனத்தின் விடுதலை யுத்தமாக மாறுகிறது.

ஈழ மண்ணில் விடுதலை போர் என்றதுமே நாம் அனைவரும் விடுதலை புலிகளின் தமிழீழ விடுதலை போரை தான் தொடர்புப்படுத்தி கொள்வோம்.

ஆனால், இங்கு தான் தமிழ் ஆடியென்ஸுக்கு இயக்குனர் கௌதம் தின்னனுரி ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

அவருடைய ஸ்கிரின் ப்ளேயின்படி, ஈழ தமிழர்கள் பஞ்சம் பொழைக்க வந்த மலையக தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதை போல இருட்டு அறையில் அமர்ந்து கொண்டு விறுவிறுப்பான ஆக்ஷன் ஸ்டோரியை எழுதி அதனை செல்லுலாய்டிலும் செதுக்கி உள்ளார்.

அதுமட்டுமின்றி ஈழத்தமிழர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு ஆதிக்குடி தமிழர்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பதை போலவும் காட்சிகள் அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மிகவும் Sensitive-ஆன Issue வை கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாமல் கற்பனை என்கிற பேரிலும், கருத்து சுதந்திரம் என்று பேரிலும் படமாக்கி உள்ளது ஈழ தமிழ் உறவுகளை மிகவும் காயப்படுத்தி உள்ளது.

இந்த விவாகாரம் தமிழக அரசியல் களத்திலும் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது.

சீமான், மற்றும் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கிங்டம் திரைபடத்தை உடனடியாக தமிழகத்தில் தடைசெய்ய வேண்டுமென அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதும் கிங்டம் திரைப்படம் ஓடக்கூடிய திரையரங்குகளுக்கு சென்று படத்தை திரையிட வேண்டாமென வேண்டுகோள் விடுத்து மனு கொடுத்திருக்கிறார்கள்.

அதோடு, திரையரங்க வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பேனர்களையும் அகற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

டோலிவுட் மற்றும் பாலிவுட் படைப்பாளிகள் ஈழத்தமிழர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் விதமாகவே காட்சிகள் அமைத்து வருவதாகவும், இதற்கு பின்னணியில் அரசியல் கணக்கும், அவார்டு ஆசையும் இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர்.

சமீபத்தில் வெளியான Jaat என்கிற பாலிவுட் திரைப்படத்திலும் ஈழத்தமிழரை வில்லன் கதாபாத்திரமாக காட்டி அவருக்கு முத்துவேல் கரிகாலன் என்கிற பெயரை வைத்திருந்தனர். Jaat திரைப்படத்தை தயாரித்தது ஆந்திராவை சேர்ந்த மைத்ரி கிரியேசன்ஸ் என்பதும் கவனத்திற்குரியதாக மாறி உள்ளது. அதே போல கிங்டம் படத்தில் வரக்கூடிய முக்கியமான சைக்கோடிக் வில்லன் கதாபாத்திரத்திற்கும் முருகன் என வைத்திருப்பதிலும் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகித்துள்ளனர்.

ஏற்கனவே, Family Man, The Hunt என பாலிவுட்டில் வெளியான வெப் சீரிஸ்கள் கூட இலங்கை தமிழர்களை தவறாக காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நடிகர் கமலஹாசன் தக்லைஃப் புரோமஷனில் தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என அன்பாக சொன்னதற்கு அம்மாநிலத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பி அந்த திரைப்படத்தை அங்கு திரையிட முடியாத சூழல் ஏற்பட்டது. அதே நேரம் தமிழர்களை பற்றி பிற மொழி படங்களில் தவறாக சித்தரித்து காட்டும் போது இங்குள்ள திராவிட கட்சிகள் யாரும் அதை எதிர்த்து வாய் திறப்பதில்லை என குற்றம் சாட்டும் நாம் தமிழர் கட்சியினர், அனைவரும் ஓரணியில் நின்று கிங்டம் திரைப்படத்தை வீழ்த்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




Next Story

மேலும் செய்திகள்