இந்திய கடலில் மிதந்த ’மெத்தம்பேட்டமைன்’ - முதல் முறையாக நாடே அதிர்ந்து போனது... ரூ.25,000 கோடி - எங்கே..? யாருடையது..?

x

இந்தியாவிலேயே முதல் முறையாக, நடுக்கடலில் ஒரே இடத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். அதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

இந்தப் பூவுலகில் போதைப்பொருள் பயன்பாடு எப்போது தொடங்கியது என்று அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், போதைப்பொருள் பயன்பாடு பல வழிகளில் உள்ளன. வாயில் போட்டு மெல்லுவது, புகைப்பது, நீரில் கலந்து குடிப்பது, ஊசியாக, மாத்திரைகளாக பயன்படுத்துவது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

போதையை விரும்புபவர்கள், தங்களுக்கு பிடித்தமான போதைப்பொருளை, வழிமுறையைத் தேர்வு செய்கிறார்கள். இதனால், உடல், மனநலக் கோளாறுகள் ஏற்படுகிறது என்று தெரிந்தும், உலகளாவிய அளவில் போதைப்பொருளின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.

போதைப்பொருள்களை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு கடத்திச் செல்வதன் பின்னணியில் பல்வேறு சட்டவிரோதச் செயல்களும், குற்றச் செயல்களும் அரங்கேறுகின்றன. இதனால்தான், இந்தியக் கடற்பகுதியில் போதைப்பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதைத் தடுக்க ஆபரேஷன் சமுத்திரகுப்தா என்ற சிறப்பு நடவடிக்கையை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.

அந்தப் பிரிவின் துணை இயக்குனர் சஞ்சய் குமார் சிங் தலைமையிலான அணி, கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. அவர்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், கடலோர மாநிலங்களின் உளவுத்துறை தகவல்களைப் பயன்படுத்தியும், கப்பல் மற்றும் படகுகளில் போதைப்பொருள்கள் கடத்தப்படுகிறதா என்று கழுகு போல வட்டமடித்துக் கொண்டிருந்தனர்.

அந்தச் சோதனையில் முதலாவதாக, பலூசிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத் கடல் வழியாக கடத்த முயன்ற 529 கிலோ ஹாசிஸ், 221 கிலோ மெத்தம்பேட்டமைன், 13 கிலோ ஹெராயின் போதைப்பொருள்களை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம், ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளை கேரள கடற்கரை பகுதியில் பறிமுதல் செய்த அதிகாரிகள், ஈரானைச் சேர்ந்த 2 கடத்தல்காரர்களை கைது செய்தனர்.

இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்ட சமுத்திரகுப்தா நடவடிக்கைகள் மூலமாக, கடந்த டிசம்பரில் 286 கிலோ ஹெராயின்,128 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள்களை கைப்பற்றிய அதிகாரிகள், 19 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாலதீவு காவல்துறையினரால் நாலு கிலோ ஹெராயின் மற்றும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சூழலில்தான் மதர்ஷிப் எனப்படும் பெரிய கப்பலில் அளவுக்கு அதிகமான போதைப்பொருள் கேரள கடற்பகுதி வழியாக கடத்திச் செல்லப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.

உடனடியாக விரைந்து சென்று, அந்த கப்பலைச் சுற்றி வளைத்து அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் மூட்டை மூட்டையாக போதைப்பொருள்கள் கடத்தி வரப்படுவது தெரியவந்தது. அந்த கப்பலை சிறைப்பிடித்து கொச்சி கடற்கரைக்கு கொண்டு வந்த அதிகாரிகள், அதிலிருந்து

134 போதைப்பொருள் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

அந்த கப்பலில் வந்த ஈரான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இருவரையும் கைது செய்தனர். இதுவரை கிடைத்த தகவலின்படி, 2,500 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 25 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் கூறும்போது, ஆச்சரியப்படாதவர்கள் இருக்க முடியாது.

பல கோடிகளை செலவு செய்து இந்தப் போதைப்பொருளை வாங்குவது யார்? எந்த நாட்டுக்கு கடத்திச் செல்லப்படுகிறது?எங்கிருந்து கடத்தப்படுகிறது? இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த விசாரணைகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்த விவரங்கள் அனைத்தும் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்