மீரா மிதுனை கைது செய்யவே முடியாத நிலை..நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்த காவல்துறை

x

தமிழ்செல்வியாக இருந்தவர் மாடலிங் துறைக்கு வருவதற்காக தன் பெயரை மீரா மிதுனாக மாற்றிக் கொண்ட வந்ததெல்லாம் கடந்த கால வரலாறு...

ஆனால் மீரா மிதுனாக மாறிய பிறகு அவர் எடுத்த ஒவ்வொரு அவதாரமும் சொல்லி மாளாது. மாடலிங் துறையில் கால் பதித்த அவர், பின்னாளில் தென்னிந்திய அழகியாக 2016ல் முடிசூடினார்...

அன்று ஆரம்பித்த சர்ச்சை தான் மீரா மிதுனை இன்னமும் துரத்திக் கொண்டிருக்கிறது... தன்னுடைய பாப்புலாரிட்டியை வைத்துக் கொண்டு தன்னிச்சையாக போட்டியை நடத்த திட்டமிட்ட மீராவுக்கு அதன்பிறகு கிடைத்ததெல்லாம் ஏமாற்றம் தான்..

காவல் நிலையம், வழக்கு என கடந்து வந்த மீரா மிதுன், யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி திடீரென பிரபலங்கள் பலரையும் வறுத்தெடுத்தார். இதனால் அவர்கள் சார்ந்த ரசிகர்கள் கொதித்துபோய் மீராவை வசவு பாட, அது ஒரு பக்கம் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருந்தது.

ஆனால் தன் ஆண் நண்பருடன் நெருக்கமாக வீடியோக்களை எடுத்து இணையத்தை கதற விட்டார் மீரா மிதுன்.. ஒரு கட்டத்தில் பட்டியலின இயக்குநர்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கி வழக்குப்பதிவு, தலைமறைவு, கேரள ஓட்டலில் கைது, கதறல் என முடிவே இல்லாமல் நீண்டது மீரா மிதுன் சர்ச்சை...

இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மீரா மிதுன், அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் என 2 பேரும் கடந்த 2021 ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் தெரிவித்தும் சொல்பேச்சை கேட்கவில்லை மீரா மிதுன். இதனால் வேறு வழியின்றி அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனாலும் மீரா மிதுன் சிக்கவே இல்லை. இந்த சூழலில் வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்து போது போலீசார் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது மீரா மிதுன் தன்னுடைய இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொள்கிறார் என்றும் தலைமறைவாக உள்ள அவரை கைது செய்யவே முடியவில்லை என காவல்துறை விளக்கம் அளித்தது...

பெங்களூருவில் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்றால் அங்கிருந்து அவர் வேறு இடத்திற்கு சென்று விட்டார் என்றும், செல்போன் எண்ணையும் அடிக்கடி மாற்றிக் கொண்டு இருப்பதால் அவரை கைது செய்யவே முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு மேல் பிடிவாரண்ட் உள்ள போதிலும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், மீரா மிதுனை உடனே கைது செய்ய வேண்டும் என தெரிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்