ஆசையாக சாப்பிட்ட ஐஸ்க்ரீமில் கிடந்த தவளை..! ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன குழந்தைகள்... கோயிலுக்கு வந்த இடத்தில் நேர்ந்த அதிர்ச்சி - மதுரையில் பரபரப்பு

x

மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அன்புசெல்வம்.

தைப்பூச தினத்தை யொட்டி, அன்புச்செல்வம் தனது மனைவி ஜானகிஸ்ரீ மற்றும் 8 வயது மகள்களான மித்ராஸ்ரீ, ரக்சனாஸ்ரீ, உறவினர் மகள் தாரணி ஆகியோரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்த பிறகு, பிள்ளைகளை அழைத்து வெளியே வந்துள்ளார் அன்புசெல்வம்.

அப்போது, கோயில் இருக்கும் பகுதியில் உள்ள ஒரு சிற்றுண்டி கடையில், ஐஸ்க்ரிம் விற்கப்படுவதை பார்த்த குழந்தைகள், தனது தந்தையான அன்புச்செல்வத்திடம், ஐஸ்க்ரீம் வாங்கித் தரச் சொல்லி அடம்பிடித்துள்ளனர்.

பின்னர் சிற்றுண்டி கடையில் இருந்த ஐஸ்கிரீமை வாங்கி, பிள்ளைகளுக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

சந்தோஷத்தில் ஐஸ்க்ரீமை ரசித்து, ருசித்து குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதில், இறந்த நிலையில் கிடந்த தவளை இருப்பதைக் கண்டு குழந்தை ஒன்று அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து தனது தந்தையிடம் கூற, அதிர்ச்சியில் ஐஸ்கிரீமை கீழே வீசியுள்ளார் அன்புச்செல்வம்.

பதற்றத்தில் இருந்த அன்புச்செல்வம், ஐஸ்க்ரீம் சாப்பிட்ட 3 குழந்தைகளை, உடனடியாக அருகில் உள்ள திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, 3 குழந்தைகளுக்கும் உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஐஸ்க்ரீம் விற்பனை செய்த கடையில் ஆய்வு செய்தனர். பின்னர் கடையில் இருந்து உணவு மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்ற அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

ஐஸ்க்ரீமில் தவளை கிடந்தது எப்படி? சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட கேள்விகள் எ​ழுந்திருக்கிறது.

பல்வேறு இடங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் சூழலில், குழந்தைகளுக்கு கடையில் இருந்து உணவுப் பொருளை வாங்கிக் கொடுப்பதற்கு முன், பலமுறை யோசித்து செயல்படுவதே நல்லது என்பதை உணர்த்துகிறது இந்த சம்பவம்...


Next Story

மேலும் செய்திகள்