மெட்ராஸ் பட பாணியில் மெட்ராஸில் நடந்த பயங்கரம் - அலறியடித்து ஓடிய வழக்கறிஞர்கள் |

x

பிரபல ரவுடியை நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே கத்தியால் கொலை செய்ய முயன்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கூலிப்படை தலைவனான மதுரை பாலா, திங்களன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அசோக் நகர் போலீசார் அழைத்து வந்திருந்தனர். அப்போது நீதிமன்றத்தில், 5 பேர் கொண்ட கும்பல் கத்தியுடன் வந்து மதுரை பாலாவை கத்தியால் தாக்கி உள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த கொலை முயற்சி தாக்குதலால் வழக்கு விசாரணைக்காக வந்திருந்த நபர்கள், வழக்கறிஞர்கள் பதறி ஓடினர். இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதற்காக துரத்தியுள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களான ராஜலட்சுமி, கிருஷ்ணவேணி, சசிகலா ஆகியோர் கத்தியுடன் ஓடிய மர்ம கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலருக்கு மர்ம நபர்கள் வைத்திருந்த கத்தி கிழித்து கையில் காயம் ஏற்பட்டது. மூன்று நபர்கள் பிடிபட்ட நிலையில், இருவர் தப்பி ஓடினர். தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிடிபட்ட மூன்று நபர்களையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஷெனாய் நகரைச் சேர்ந்த சக்திவேல், அருண், குன்றத்தூரைச் சேர்ந்த அப்துல் மாலிக் என்பது தெரிய வந்தது. தப்பி ஓடிய மற்ற இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்