ரூ. 485-க்குகாக வெறிச்செயல்..இளைஞரின் கொடூர இரட்டை கொலை - கர்நாடகாவை உலுக்கிய பகீர் சம்பவம்

x

மது வாங்க பணம் இல்லாததால், இளைஞர் நடத்திய மூர்க்கத்தனமான செயல் போலீசாரையே அதிர வைத்துள்ளது. அதுவும் வெறும் 485 ரூபாய் பணத்திற்காக... கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டத்தின் உன்சூர் பகுதியில் உள்ள நூற்பாலை அருகே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கூலித் தொழிலாளிகளான வெங்கடேஷ், சண்முகா என்ற இரு முதியவர்களும் உடலில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தலையில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டதில், இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், இளைஞர் ஒருவர் நூற்பாலை அருகே சுற்றி சுற்றி வந்தது தெரியவந்தது. அந்த இளைஞரின் புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்திய போலீசார், உன்சூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த அவரை பிடித்து செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் அபிஷேக் என்பது தெரியவந்தது. மதுபோதைக்கு அடிமையான அந்த இளைஞர், மது வாங்க கையில் பணம் இல்லாததால், அந்தப் பகுதியில் சுற்றி சுற்றி வந்துள்ளார்.

பின்னர், அங்கிருந்த முதியவர்களான வெங்கடேஷ் மற்றும் சண்முகா ஆகியோரின் சட்டைப் பையில் இருந்து பணத்தை திருட முயற்சித்தபோது, இருவரும் கூச்சலிட்டுள்ளனர். அப்போது, சத்தம் போடுவதை தடுக்க, உருட்டுக் கட்டையால் தலையில் பலமாக தாக்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவர்களின் சட்டைப் பையில் இருந்த 485 ரூபாயை திருடிச் சென்று மதுவாங்கி குடித்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அபிஷேக்கை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வெறும் 485 ரூபாய்க்காக 2 பேரை கொலை செய்த இளைஞரின் வெறிச்செயல், அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்