சபரிமலையில் மலை போல் குவிந்துள்ள காணிக்கை காசுகள்... எண்ண முடியாமல் திணறும் ஊழியர்கள்...!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளன.
கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கிய மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நிறைவுபெற்றது.
அதன்பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கியது. இந்த காலங்களில் கேரளா, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
சுமார் 50 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலை வந்த பக்தர்கள் அங்கு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்களில் பணம் மற்றும் காசுகளை காணிக்கையாக செலுத்தினர். இதனால் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து உண்டியல்களும் நிரம்பி விட்டன.
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நிறைவு விழா இன்று இரவோடு முடிவடைகிறது. இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
நாளை காலை 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதி கோவில் நடை திறக்கப்படும்.
இந்த சூழ்நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிடும் பணி தற்போது சபரிமலையில் நடைபெற்று வருகிறது. இதில் நாணயங்களை எண்ணும் பணி தான் ஊழியர்களுக்கு சவாலாக உள்ளது.
காணிக்கையில் ரூ.7 கோடி மதிப்பில் நாணயங்கள் மட்டும் இருக்கும் என தேவசம்போர்டு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக காணிக்கை எண்ணும் பணி, பாதுகாப்பு நிறைந்த பண்டாரப்புரா மண்டபத்தில் நடைபெறும். இந்த ஆண்டு அதிக அளவு காணிக்கை கிடைத்துள்ளதால், பண்டாரபுரா மண்டபத்தில் பணியாளர்கள் உட்கார இடம் இல்லை. எனவே பண்டாரப்புரா மண்டபத்திற்கு வெளியே வாவர் ஓடையின் முன்பு தார்ப்பாய் விரிக்கப்பட்டு நாணயங்கள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
அன்னதான மண்டபம் முன்பும் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றன. பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் உள்ள உண்டியல்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அவற்றையும் திறந்து காணிக்கை பணம் முழுவதையும் எண்ணி முடித்தால், ரூ.330 கோடி வரை வசூலாக வாய்ப்பு இருப்பதாக தேவசம் போர்டு கருதுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ரூ.316 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்கனவே தேவசம்போர்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

