ரிசர்வ் வங்கி மீதே சைபர் தாக்குதல்.. ஆட்டம் கண்ட இந்தியாவின் அச்சாணி - யார் செய்தது?

x

பாதுகாப்புக்கு பெயர் போன மத்திய ரிசர்வ் வங்கி பராமரிக்கும் கணக்கிலேயே சைபர் க்ரைம் குற்றவாளிகள் கைவரிசையை காட்டியிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...


மத்திய ரிசர்வ் வங்கி... இந்தியாவில் வங்கிகளுக்கு எல்லாம் தலைமை வங்கி.

நாட்டின் ரூபாய் நோட்டை அச்சடிக்கும் உரிமம் கொண்ட ரிசர்வ் வங்கி, பாதுகாப்புக்கு பெயர் போனது.... நாம் எப்படி வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறோமோ, அதுபோல் வங்கிகள் எல்லாம் ரிசர்வ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும்.


இப்படி டெல்லியை சேர்ந்த கங்க்ரா கூட்டுறவு வங்கி, ரிசர்வ் வங்கியில் வைத்திருந்த கணக்கில் தான் சைபர் க்ரைம் குற்றவாளிகள் கைவரிசையை காட்டியிருக்கிறார்கள்.


கங்க்ரா கூட்டுறவு வங்கி, ரிசர்வ் வங்கியில் நடப்பு கணக்கை பராமரிக்கிறது. அதிலிருந்து தினசரி 4 கோடி ரூபாயை செட்டில்மென்ட் கணக்கிற்கு மாற்றும் நடைமுறையை ரிசர்வ் வங்கியுடன் பராமரிக்கிறது. தங்கள் வாடிக்கையாளர்கள் பிற வங்கிக்கு தடையின்றி பரிவர்த்தனையை செய்வதற்கான RTGS, NACH சேவையை வழங்குவதற்காக இந்த நடைமுறையை கங்க்ரா கூட்டுறவு வங்கி கொண்டுள்ளது. இறுதியாக செட்டில்மென்ட் கணக்கில் மீதமிருக்கும் தொகை நடப்பு கணக்கிற்கு மாறும். ஒவ்வொரு நாளும் செட்டில்மென்ட் கணக்கில் நடக்கும் பரிவர்த்தனைகள் குறித்த தரவுகளை ரிசர்வ் வங்கி, கங்க்ரா கூட்டுறவு வங்கிக்கு மெயிலாக அனுப்பும். இப்போது இதில் தான் சிக்கல் எழுந்திருக்கிறது.

ஆம், செட்டில்மென்ட் கணக்கிலிருந்து ஏப்ரல் 20 ஆம் தேதி 3 கோடியே 14 லட்சம் ரூபாய் மற்றொரு நடப்பு கணக்கிற்கு சென்றிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது எப்படி நடந்தது என்று அதிகாரிகள் குழம்பிய நிலையில், அடுத்தடுத்த நாட்களில் 2 கோடியே 40 லட்சம் ரூபாயும், 2 கோடியே 23 லட்சம் ரூபாயும் மற்றொரு கணக்கிற்கு சென்றிருப்பதை கண்டு அதிர்ந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கூட்டுறவு வங்கி அதிகாரிகள் விஷயத்தை ரிசர்வ் வங்கி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.


உடனடியாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தங்கள் தரவுகளை சோதித்தபோது, இந்த பணம் எல்லாம் மற்ற வங்கிகளில் உள்ள நடப்பு கணக்கிற்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் பணத்தை எடுத்தது யார்...? எப்படி இந்த மோசடி அரங்கேற்றப்பட்டது என்பது தெரியவரவில்லை. இதுதொடர்பாக கங்க்ரா கூட்டுறவு வங்கி கொடுத்த புகாரில் டெல்லி சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்


Next Story

மேலும் செய்திகள்