ஜெ. மரண அறிக்கை.. மௌனம் கலைத்த சசிகலா | Sasikala | JayalalithaDeathreport

x

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரண விவகாரத்தில், எந்தவிதமான விசாரணை நடத்தினாலும், அதை சந்திக்க தயாராக இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தம் மீது பழிபோடுவது புதிது இல்லை என்றும், தாம் ஜெயலலிதாவின் கரத்தை பற்றியது தொடங்கி, இந்த நிமிடம் வரை பழிபோடும் படலம் தொடருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னை அரசியலிலில் இருந்து ஓரம் கட்ட வேறு வழிகளை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும், ஆனால், அதற்காக ஜெயலலிதா மரணத்தை தேர்ந்தெடுத்திருப்பது கொடுமையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்கு ஒரு விசாரணை ஆணையம் அமைத்து, அந்த ஆணையத்தின் அறிக்கையையும் அரசியலாக்கி விட்டதாக சசிகலா கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரண வழக்கை, எத்தனை முறை, எந்த வடிவத்தில் விசாரித்தாலும், உண்மை மாறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணை ஆணையம், அதிகார வரம்பை மீறி, தேவையற்ற அனுமானங்களைக் கூறி, தம் மீது பழி போடுவது எந்தவிதத்தில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாருடைய அ ரசியல் ஆதாயத்திற்கோ உதவும் நோக்கில், தேவையற்ற சர்ச்சை கருத்தை ஆணையம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் எந்த விதத்திலும் தாம் தலையிட்டதில்லை என்றும், வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க தாம் எந்த விதத்திலும் தடையாக இருந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜெயலலிதாவுக்கு அன்றைய சூழலில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க எந்த தேவையும் ஏற்படவில்லை என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்பட அனைத்து மருத்துவர்களும் முடிவெடுத்ததாக கூறியுள்ளார்.

தம்மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை தாம் முற்றிலும் மறுப்பதாகவும், இதுதொடர்பாக, தம்மிடம் எந்த விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்