#breaking|| "கொரோனா பரவுவது உண்மை.. மரணம் நேரலாம்.. இவர்கள் உஷார்.. மீண்டும் கட்டுப்பாடா?" - பேரவையில் அமைச்சர் பரபரப்பு விளக்கம்

x

தமிழ்நாட்டில் பரவிவரும் ஒமிக்ரான் XBB 1.16 வைரஸால் தற்போது பெரிய அளவில் பதட்டம் இல்லை எனவும், தொற்று பாதிப்பு அதிகரிக்கும் போது மாஸ்க் அணிவது கட்டாயமாக்க அறிவுறுத்தப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும், தொற்று பரவல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் , மாஸ்க் அணிவது குறித்து அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் எனவும் கோரினார்.


எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானத்தை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுத்துக்கொள்வதாகவும் கட்சிக்கு ஒருவர் வீதம் பேசலாம் என சபாநாயகர் அறிவித்ததன் அடிப்படையில் பேரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்களும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.


அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒமிக்ரான் XBB 1.16 , வைரஸ் புதிதாக பரவ துவங்கியுள்ளது எனவும் தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் பரவி வருவதாக கூறினார்.


கொரோனா பரவல் கட்டுப்படுத்துவது தொடர்பாக நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் மருத்துவமனைகளில் பரவல் அதிகரிப்பது தெரிந்ததால் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 11 ஆயிரத்து 333 மருத்துவமனைகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


கொரோனா மூன்றாவது அலைக்கு பிறகு மக்கள் மாஸ்க் அணிவது குறைந்துள்ளதாகவும், மக்கள் மாஸ்க் அணிவது அவசியம் என அவர் கூறினார்.


திமுக ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தில் 230 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருந்ததாகவும் தற்போது 24 ஆயிரத்து 61 Concentrators, 130 Generators, மற்றும் 2 ஆயிரத்து 67 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உள்ளதாகவும், தற்போது 64 ஆயிரத்து 781 படுக்கை வசதி உள்ள சூழலில், பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் 24 மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் படுக்கைகள் உருவாக்கும் விதத்தில் கட்டமைப்புகள் உள்ளதாக கூறினார்.

தற்போது பரவி வரும் வைரஸ் உயிர் பரிக்கும் வைரஸ் அல்ல மிதமான வைரஸாக தான் உள்ளது. ஆக்சிஜன் அல்லது அதி தீவிர சிகிச்சை தேவைப்படும் வகையில் இல்லை. அதனால் இந்த பரவலை நான்காவது அலை என கூற முடியாது.

ஒருவேளை பரவல் எண்ணிக்கை நாளொன்றுக்கு 500 ஐ தாண்டும் போது பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

தொற்று அதிகரித்தால் அதனை எதிர்ககொள்ள அனைத்து வகையிலும் தயாராக இருப்பதாகவும், அதேவேளையில் இணை நோய் உள்ளவர்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி அமைச்சர் அறிவுறுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்