இன்ஸ்டா என்ட்ரிகு இதுதான் காரணமா..? - விஜயின் அடுத்த பிளான் என்ன..?

x

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு இன்று.... நேற்று அல்ல... பல ஆண்டுகளாக தொடரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் இதுவரை தனது அரசியல் பிரவேசம் குறித்து வாய் திறக்கமால் மெளனம் காத்து வந்த நடிகர் விஜய், வெளிப்படையாக அரசியல் பேசாவிட்டாலும், தனது செயல்களாலும், திரைப்பட வசனங்களாலும் மறைமுகமாக தனது அரசியல் நாட்டத்தை வெளிப்படுத்த தவறுவதில்லை.

தனது ரசிகர் மன்றத்தை எல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என ஒருங்கிணைத்து, அவர்களுக்கென்று தனி கொடியையும் அறிமுகம் செய்து வழிநடத்தி வரும் விஜய்யின் சமீபத்திய செயல்பாடுகள் ஒவ்வொன்றும்... அவரது அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமிட்டு வருவதை மறுப்பதற்கும் இல்லை... மறைப்பதற்கும் இல்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்கு காரணம். தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்த தனது தந்தையை கடிந்து கொண்ட அதே விஜய் தான்...

கடந்த 2021 ஆம் ஆண்டு... ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சைகளாக களமிறங்கும் தனது ரசிகர்கள்... தனது பெயரையும், படத்தையும் பயன்படுத்தி கொள்ள பச்சை கொடி காட்டினார். இது விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு போடப்பட்ட முதல் பிள்ளையார் சூழியாக பார்க்கப்பட்டது.

சென்ற ஆண்டு புதுவை மற்றும் தெலங்கானா முதலமைச்சர் களுடான விஜய்யின் அடுத்தடுத்த சந்திப்புகளும் அவரது அரசியல் என்ட்ரிக்கு தூபம் போடுவதாக அமைந்தன.

மேலும், தங்களுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கத்தை தொடங்கியது... தேர்தல் பிரச்சார அஸ்திரமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு தொடங்கத்தில் தனது வாரிசு பட ரிலீஸுக்கு முன்னர் ரசிகர்களுடன் சந்திப்பு... சமீபத்தில் இன்ஸ்டாவில் மாஸ் என்ட்ரி என தனது லியோ படப்பிடிப்பிற்கு மத்தியில் அப்டேட்ஸ்களால் ரசிகர்களை கவருவதில் ஆக்டிவாக இருந்து வரும் விஜய்... தற்போது தனது விஜய் மக்கள் இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டு வருகிறாரா? என்று பலரையும் பேச வைத்திருக்கிறார்.

அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதி, மாவட்டம்தோறும் அம்பேத்கரின் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் உத்தரவிடப்பட்டிருப்பதே இதற்கு காரணம்.

அதோடு, ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதனால் இம்முறை தனது அரசியல் பயணத்தை அம்பேத்கரிலிருந்து தொடங்குகிறாரா நடிகர் விஜய்? என்ற கேள்வி எழுந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்