நம்பர் 1 சீனாவுக்கா இப்படியொரு சோதனை?.. இப்படியே போன ரொம்ப கஷ்டம்.. இரட்டை தாக்குதல்.. புழுங்கும் அதிபர்..
சீனாவில் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்யும் விகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மாணவர்கள் தற்கொலைக்கு என்ன காரணம்? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்
உலகிலேயே மிகப்பெரிய கல்வி முறையை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. 2021ஆம் ஆண்டு நிலவரப்படி சீனாவில் ஒட்டுமொத்தமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 29 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் சீனாவின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதில் , 2010 முதல் 2021ஆம் ஆண்டு கால கட்டத்தில், 5 முதல் 14 வயதுடைய குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் ஒவ்வொரு ஆண்டும், 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 2017 முதல் 2021 வரையிலான கால கட்டத்தில், 15 முதல் 24 வயதுடைய இளம் பருவத்தினர் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் ஒட்டுமொத்தமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில், பாதி பேர் மாணவர்கள் என்ற பகீர் தகவல் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி - கல்லூரிகளில் படிப்புச் சுமை அதிகரித்திருப்பதே மாணவர்களிடையே மன அழுத்தம் ஏற்பட முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
படிக்க சொல்லி பள்ளியில் ஆசிரியர்கள் தரும் அழுத்தம் ஒருபுறம், நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டியூசனுக்கு அனுப்பும் பெற்றோர்கள் தரும் அழுத்தம் ஒருபுறம் என இரட்டை தாக்குதலுக்கு மாணவர்கள் உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே மாணவர்கள் மத்தியில் தற்கொலை எண்ணம் மேலோங்குவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், மாணவர்கள் தற்கொலையை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவரும் சீனா, லாப நோக்கத்திற்காக தனியார் நிறுவனங்கள் டியூஷன் என்ற பெயரில் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தை கற்பிப்பதற்கு தடை விதித்துள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க சீன அரசு "மனநல பாதுகாப்பு முகாம்கள்'' போன்ற தீவிர நடவடிக்கை களை எடுக்க வேண்டுமென்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.