இறுதிக்கட்டத்தில் ஐபிஎல் தொடர்.. வரிசையில் நிற்கும் 4 அணி! - பிளே-ஆஃப் வாய்ப்பு யாருக்கு...

x

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 16வது ஐபிஎல் தொடரில் இன்னும் 5 போட்டிகளே எஞ்சி இருக்கின்றன. ஆனால் இதுவரை குஜராத் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.

பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான மற்ற 3 இடங்களுக்கு 7 அணிகள் வரிசைக் கட்டி நிற்கின்றன. எல்லா அணிகளுக்கும் தலா 1 போட்டி மீதம் இருக்கிறது.

15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் சென்னை, பிளே-ஆஃப் சுற்றுக்கு சுலபமாக தகுதி பெற வேண்டும் என்றால், கடைசி லீக் போட்டியில் டெல்லியை வெல்ல வேண்டும்... ஒருவேளை டெல்லியிடம் தோற்றால் மற்ற அணிகளின் முடிவை எதிர்பார்த்திருக்க வேண்டும். டெல்லியிடம் தோற்று, தங்கள் கடைசி லீக் போட்டிகளில் லக்னோ, பெங்களூரு, மும்பை அணிகள் வென்றால் சென்னையின் பிளே-ஆஃப் கனவு சுக்குநூறாகிவிடும்....

15 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் லக்னோவிற்கும் சென்னையின் நிலைதான்... கடைசி லீக் போட்டியில் கொல்கத்தாவை வென்றால் பிளே-ஆஃப்பில் லக்னோ கால்பதிக்கும்... ஒருவேளை தோல்வி அடைந்தால் மற்ற போட்டிகளின் முடிவிற்கு காத்திருக்க வேண்டும்... கொல்கத்தாவிடம் தோற்று, சென்னை, பெங்களூரு, மும்பை அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் வென்றால் லக்னோ வெளியேற நேரிடும்...

14 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் பெங்களூருக்கு, பிளே-ஆஃப் வாய்ப்பு தற்போது பிரகாசமாகி இருக்கிறது. ரன் ரேட்டும் பிளஸ்ஸில் இருப்பது சாதகமாக பார்க்கப்படுகிறது. கடைசிப் போட்டியில் குஜராத்தை டீசன்ட்டான ரன் ரேட்டில் வென்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு ஏறக்குறைய பெங்களூரு முன்னேறிவிடும். ஆனால் அதிலும் சிறிய சிக்கல் இருக்கிறது... கால்குலேட்டருக்கும் வேலை இருக்கிறது. மும்பை அவர்களின் கடைசி லீக் போட்டியில் அதிக ரன் ரேட்டில் வெல்லக் கூடாது. மும்பை வென்று பெங்களூரு தோல்வி அடைந்தால், இந்த முறையும் பெங்களூரு ரசிகர்களுக்கு இதயங்கள் தான் எஞ்சும்... வழக்கம்போல் ஈ சலா கப் நம்தே... காற்றில் கலந்த கோஷமாகிவிடும்.

14 புள்ளிகளுடன் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் மும்பைக்கு பெங்களூருவின் நிலைதான்... ரன் ரேட் மைனஸில் இருப்பது மும்பைக்கு பின்னடைவு... பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற கடைசிப் போட்டியில் ஹைதராபாத்தை நல்ல ரன் ரேட்டில் வெல்ல வேண்டும். தோல்வி அடைந்தால் மும்பையின், பிளே-ஆஃப் வாய்ப்பு மங்கிவிடும். மும்பை தோற்று, தங்களின் கடைசி லீக் போட்டிகளில் சென்னை, லக்னோ, பெங்களூரு வென்றால், 5 முறை சாம்பியனான மும்பை, மூட்டை முடிச்சுகளைக் கட்ட வேண்டியதுதான்...

12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்கான பிளே-ஆஃப் வாய்ப்பு குறைவுதான். கடைசிப் போட்டிகளில் இந்த அணிகள் வென்றாலும், மற்ற போட்டிகளின் முடிவைப் பொறுத்தே வாய்ப்பு அமையும்....

கடைசி 2 இடங்களில் இருக்கும் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. என்றாலும் இந்த இரு அணிகளும் வெற்றி பெற்றால் சென்னை, மும்பைக்கு சிக்கலாகி விடும்..


Next Story

மேலும் செய்திகள்