"இது அரசு கோயிலா உள்ள விடுறதுக்கு" அவமானப்படுத்தப்பட்ட அப்பாவி இளைஞர்கள்... அப்பட்டமாக சாதி வெறி காட்டிய பூசாரி - தீயாய் பரவும் வீடியோ

x

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே, பட்டியலின இளைஞர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

கரூர் மாவட்டம் வீரணம்பட்டி அருகே காளியம்மன் கோவிலில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளைஞரை அனுமதிக்காத விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இருதரப்பு பிரச்சனையால் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் கோவிலை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

இந்த விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் கரூரில் தீண்டாமை சர்ச்சை வெடித்துள்ளது.

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு வழிபாட்டுக்காக இளைஞர்கள் சென்றுள்ளனர்.

அவர்களிடம் நீங்கள் எந்த ஊரு என கேள்வி எழுப்பிய கோவில் பூசாரி, அரசாங்கம் நடத்தும் கோவிலில் மட்டும் தான் பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி என்றும், இது தனியார் கோவில் என்பதால் அனுமதி இல்லை எனக்கூறி அவர்களை வெளியில் அனுப்பியுள்ளார்.

நாங்கள் கோவிலுக்குள் வர என்ன செய்ய வேண்டும் என இளைஞர் கேட்க, இந்த கோவில் ஒரு சமூகத்தினரால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படுவதாகவும், அதனால் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே அனுமதி என பூசாரி தெரிவித் துள்ளார்.

இளைஞர்களை கோவிலை விட்டு வெளியே அனுப்பியதோடு, எல்லாம் வாசல் வரையில் தான் என்றும், எங்க போயி ரிப்போர்ட் பண்ணனுமோ பண்ணுங்க என எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி பகிரங்கமாக தெரிவித்தார் கோவில் பூசாரி....இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...

ஏற்கனவே சாதிய பாகுபாடு காரணமாக, விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி அருகே திரௌபதி அம்மன் கோவிலில், பட்டியிலன மக்களை அனுமதிகாதது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு பதற்றம் தொடர்ந்தது.

இச்சம்பவத்தின் பதற்றமே ஓயாத நிலையில், அடுத்தடுத்து இது போன்ற தீண்டாமை சம்பவங்கள் அரங்கேறி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்