அதிகரிக்கும் காலி பணியிடங்கள்...என்ன செய்ய போகிறது போக்குவரத்து கழகம்?

x

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கீழ் இருக்கும் காலி பணியிடங்கள் முப்பதாயிரமாக அதிகரித்துள்ளது. ஆண்டொன்றுக்கு 4,500 முதல் 5000 வரையிலான ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில், புதிய பணியாளர்கள் நியமிக்கப்படாததால், தொடர்ந்து பேருந்துகளை சீராக இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்பட 1 லட்சத்து 44,818 பேர் பணியாற்றி வந்தனர். இதில் 28 ஆயிரத்து 559 பேர் கடந்த பிப்ரவரி மாதம் வரை ஓய்வு பெற்றுள்ளனர். மேலும் 700 பேர் வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளனர் .

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை மற்றும் நிர்வாக சிக்கல்கள் காரணமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 2014 - 15 ஆம் ஆண்டு நிலவரப்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் 20,684 பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது அவை 18 ஆயிரத்து ௭௨௩ ஆக குறைக்கப்பட்டுள்ளன.அதே போல் சர்வீஸ் அடிப்படையில் பார்த்தால், கடந்த 2014-15ஆம் ஆண்டில் அரசுப் பேருந்துகள் ஒரு நாளைக்கு 91.90 லட்சம் கிலோ மீட்டர் வரை இயக்கபட்ட நிலையில், தற்போது பேருந்து இயக்கம் 77.71 லட்சம் கிலோ மீட்டர் வரை... அதாவது 15.59 சதவீதம் வரை குறைந்துள்ளது..இதனிடையே அரசு போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் குறைந்து இருப்பதாகவும் பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். 9 ஆண்டுகளுக்கு முன் 1.82 லட்சம் கிலோ மீட்டர் வரை ஓடினால் அரசு பேருந்துகளின் டயர்கள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது 3.03 லட்சம் கிலோ மீட்டருக்கு ஒருமுறை தான் டயர்கள் மாற்றப்படுவதாகவும் ,

பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஊழியர்கள் கடும் பணி சூழலுக்கு தள்ளப்படுவதாகவும் , இதனால் விபத்துகளும், பேருந்துகள் பழுதடைந்து நிற்பதும் அதிகரித்திருப்பதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதேபோல், போக்குவரத்து கழகங்கள் திறம்பட செயல்பட போக்குவரத்து கழகத்தில் இருக்கக்கூடிய காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதனிடையே, அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், நிதித்துறை ஒப்புதலுடன் புதிய பணியாளர்களை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்