வெள்ளை வேஷ்டி, சட்டையில்... அரசியல்வாதிகள் போல் வணக்கம்

x

சமூக வலைதளம் மூலம் பல பெண்களை சீரழித்த நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை சிறை தண்டனை அளித்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

பேஸ் புக் மற்றும் இன்ஸ்டா மூலமாக சிறுமிகள் முதல் திருமணம் ஆன பெண்கள் வரை பலரை காதல் வலையில் விழ வைத்தவர் நாகர்கோவில் காசி. இவர் விரித்த வலையில் விழுந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து மிரட்டி வந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், காசி மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 8 வழக்குகளில் ஒன்றான, நாகர்கோவிலை சேர்ந்த பெண் அளித்த புகார் மீதான தீர்ப்பை நாகர்கோயில் மகளிர் நீதிமன்றம் வழங்கியது. இதில், காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம், அவர் சாகும் வரை சிறையில் இருக்கவும், 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அவரது தந்தை தங்கபாண்டியன் விடுதலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 34 ஆவணங்கள், 20 சான்றுகள் சமர்பிக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் லிவிங்ஸ்டன் கூறினார். காசிக்கு கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவித்தார். நீதி மன்றத்தை விட்டு வெளியே வந்த காசி அரசியல் வாதி போன்று வெள்ளை சட்டை வேஷ்டி அணிந்து வந்து, அரசியல் வாதி போன்றே இரு கை கூப்பி வணக்கம் செலுத்தி விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்