"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்..."-என்ன சார்..உங்க சட்டம்..?-நடுரோட்டில் படுத்து போரடிய காவலர்
வேலியே பயிரை மேய்ந்த கதையாய்,
காவல் நிலைய அதிகாரிகளே லஞ்சம் பெற்றுக்கொண்டு கைதியை தப்பிக்க விடுவதாக,
காவலர் ஒருவர் புகார் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகேயுள்ள போக்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு நபரை, அங்கு பணியாற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த காவலர் ஒருவர், கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து அந்த நபரை லாக்கப்பில் அடைத்துள்ளனர். இந்நிலையில், காவல் நிலையம் சென்று பார்த்தபோது அந்த காவலருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
லாக்கப்-இல் இருந்த அந்த நபரை காணாததால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே இதுகுறித்து சக காவலர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது கேள்விக்கு காவல் நிலைய அதிகாரிகள் மழுப்பலாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதன் பின்னால் நடந்தது என்ன என்பதை அறிந்த அவர், கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார். ஆம்..
காவல் நிலையத்தில் பணியாற்றும் சில காவலர்கள், லாக்கப்பில் இருந்த நபரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்த நபரை தப்பிக்க விட்டது தெரிய வந்துள்ளது.
இதை அறிந்தவுடன் செம டென்ஷன் ஆன அந்த காவலர்,
நேராக காவல் கண்காணிப்பாளரிடம் சென்று புகார் அளிப்பார் என்று பார்த்தால்,
மாறாக நடுரோட்டில் படுத்து புரண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, அந்த காவலர் செய்த விஷயம் தான் இப்போது வைரலாகி வருகிறது.
கையில் ஒரு கயிறை எடுத்துக்கொண்டு, விறுவிறுவென நடந்து சென்ற அவர்,
எப்போதும் பரபரப்பாக காணப்படும் பதன்கோட் நெடுஞ்சாலையின் குறுக்கே,
கயிற்றை கட்டி போக்குவரத்தை நிறுத்தியுள்ளார்.
அத்துடன் சாலையில் செல்லும் வாகனங்களின் முன்பு படுத்துப் புரண்டு போராடியிருக்கிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக காவலர்கள், அவர் கட்டியிருந்த கயிற்றை உடனடியாக அவிழ்த்து எறிந்தனர். மேலும், சாலையில் படுத்திருந்த அவரை சக காவலர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்துள்ளார்.
இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த வீடியோவில், "நான் கஷ்டப்பட்டு திருடர்களை பிடித்துக் கொடுத்தால்,
காவல் அதிகாரிகள், லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்த திருடர்களை வெளியே விட்டு விடுகிறார்கள் எனவும்,
இதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை" என்றும், பாதிக்கப்பட்ட காவலர் நடுரோட்டில் படுத்துக்கொண்டே பேசுவது வைரலாகி உள்ளது.
இந்நிலையில், அந்த காவலரின் குற்றச்சாட்டை காவல் நிலைய பொறுப்பாளர் சுக்ஜித் சிங் மறுத்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், "சம்பந்தப்பட்ட கைதி ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும்,
போராட்டம் நடத்திய காவலரை காவலர்கள் யாரும் காலால் எட்டி உதைக்கவில்லை" என்றும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது, அங்குள்ள காவலர்களுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியமாக உள்ளது.
