"மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால்.. " - பகிரங்கமாகவே எச்சரித்த முதல்வர்

x

ஆங்கில நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் தி.மு.க அமைச்சர்களை குறிவைத்து பா.ஜ.க செயல்படுவதாகவும்,

அமலாக்கத்துறை நடவடிக்கையால் பா.ஜ.க மீதான தனது நிலைப்பாட்டை தி.மு.க மாற்றிக் கொள்ளாது என்றும் குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தி.மு.க. அரசை, சுமுகமாக செயல்படவிடக்கூடாது என்பதே ஆளுநரின் நோக்கமாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.

வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் தி.மு.க. அரசின் நடவடிக்கையை ஆளுநரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

ஜப்பான், சிங்கப்பூருக்கு தான் அரசுமுறைப்பயணம் மேற்கொண்டதை விமர்சித்த ஆளுநர்,

தமிழ்நாடு குறித்து முதலீட்டாளர்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்த முயன்றதாகவும் குற்றம் சாட்டினார்.

அமைச்சரை நியமிப்பதற்கோ, நீக்குவதற்கோ ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,


மத்திய அரசு ஆளுநருக்கு கடிவாளம் போடாவிட்டால், தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என எச்சரித்தார். அரசியலமைப்பு சட்டப்படி செயல்படாமல் அரசியல்வாதிபோல் ஆளுநர் செயல்படுவதாகவும் விமர்சித்தார்.


வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழக்குகளில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படவில்லை என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் வருமான வரி சோதனை நடந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், மனிதாபிமானமற்ற முறையில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வேண்டும் என்பது மட்டுமின்றி, ஆளுநர் பதவியே தேவையற்றது என்பதே தி.மு.கவின் நிலைப்பாடு என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மத்திய அரசு தமிழகத்தை குறிவைத்து வருவதாக குற்றம் சாட்டிய முதலமைச்சர், தேசிய முன்னணியை உருவாக்க முயற்சிப்பதால், இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பா.ஜ.க.வின் திட்டம் ஒருபோதும் ஈடேறாது என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதே தங்களது குறிக்கோள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்