காதல் மனைவி கழுத்தறுத்து கொலை… சந்தேக புத்தியால் கணவர் வெறிச்செயல்

x

குருதி தரையில் உறைந்திருக்க பெண் ஒருவர் வீட்டுக்குள் சடலமாக கிடந்துள்ளார். சிறிது நேரத்தில் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். சரிந்து கிடந்த சடலத்தை மீட்ட போலீசார் ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். குடும்பச் சண்டை கொலையில் முடிந்த பயங்கரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.கொல்லப்பட்டவர் திவ்யா. 27 வயதாகிறது. விழுப்புரம் மாவட்டம் சாலமேடு பகுதியை சேர்ந்தவர். திவ்யாவின் கணவர் வடிவேல். தூரத்து உறவினர்களான இவர்கள் 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அப்போது திவ்யாவிற்கு வெறும் 17 வயதுதான். திருமண வயது முழுமையடைவதற்கு முன்பே இல்லற வாழ்க்கையில் இணைந்திருக்கிறார் திவ்யா. தற்போது இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

காலப்போக்கில் அவர்கள் காதல் திருமணத்தை இரண்டு குடும்பமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. குறைவான சம்பளம் என்றாலும் நிறைவான மகிழ்ச்சி குடும்பத்தில் நிறைந்திருக்கிறது. ஆனால் அது வெகுநாள் நீடிக்கவில்லை. காரணம் வடிவேலுவின் மதுப்பழக்கம்.மதுவுக்கு அடிமையான வடிவேலு நாளாக நாளாக வன்முறையில் இறங்கியிருக்கிறார். கூடவே சந்தேக பேயும் அவரை பிடித்து ஆட்டியிருக்கிறது. தினமும் திவ்யாவை சித்ரவதை செய்து தாக்குவது வடிவேலுவின் வாடிக்கையாக மாறி போயிருக்கிறது.

பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக கணவர் செய்யும் கொடுமைகளையெல்லாம் சகித்து கொண்டு திவ்யா வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், கடைசிவரை வடிவேலு திருந்தவே இல்லை. மாறாக அவரது அட்ராசிட்டி அதிகரித்திருக்கிறது.தினம் தினம் நரகத்தில் உழன்ற திவ்யா இரண்டு மாதங்களுக்கு முன் வடிவேலுவின் கொடுமை தாங்கமுடியாமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். குடும்பப் பிரச்சனை பூகம்பமாக வெடிக்க கணவருடன் வாழ மறுத்து தாய்வீட்டிலேயே செட்டிலாகியிருக்கிறார்.மனைவி பிள்ளைகள் தன்னைவிட்டு பிரிந்துசென்ற பிறகுதான் வடிவேலு தான் செய்த தவறை உணர்ந்திருக்கிறார்.சம்பவத்தன்று காலை மாமியார் வீட்டிற்கு சென்ற வடிவேலும், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை சமாதானம் செய்து அழைத்து வந்திருக்கிறார். ஆனால், வீட்டிற்கு வந்த பிறகு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது.

வடிவேலு மனதிலிருந்த பழைய பிரச்சனை திவ்யா மீது தாக்குதலாக மாறியிருக்கிறது. அந்த ஆத்திரத்தில் சமையலறையிலிருந்த கத்தியால் திவ்யா கழுத்தை அறுத்து கொலைச் செய்திருக்கிறார் வடிவேல். பிறகு காவல்துறையிடமிருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாகியிருக்கிறார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் வடிவேலுவை தேடி வருகின்றனர். திவ்யா கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வடிவேலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்