ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன். 58 வயதான இவர், அந்த பகுதியில் செங்கல் சூளை வைத்துள்ளார். இவருக்கு ஜெயா என்ற மனைவியும், மகன்களும் உள்ளனர். சம்பவம் நடந்த அன்று இரவு, ஏசுதாசன் மனைவியை அழைத்து கொண்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருக்கிறார். அப்போது அவர்களை வழிமறித்த கும்பல் ஒன்று, பயங்கர ஆயுதங்களால் ஏசுதாசனை மனைவி கண் முன் வெட்டி கொலை செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். அப்போது தான் இந்த கொலைக்கு பின்னால் ஒரு கள்ளக்காதல் விவகாரம் இருப்பது தெரியவந்திருக்கிறது.
ஏசுதாசனுக்கும் ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகரை சேர்ந்த அன்பு என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்திருக்கிறது. அன்பு அந்த ஏரியாவின் முக்கியமான ரவுடி. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. அன்பின் அண்ணியோடு ஏசுதாசன் கள்ளக்காதலில் இருந்திருக்கிறார். பணம் கொடுக்கல் வாங்களோடு இந்த கள்ளக்காதல் விவகாரமும் சேர்ந்து கொள்ள இருவருக்கும் பகை அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில் தான், அன்பு ஏசுதாசனை தீர்த்துகட்ட முடிவு செய்திருக்கிறார்.
சம்பவம் நடந்த அன்று அன்பு அவரது ஆட்களோடு சேர்ந்து ஏசுதானை வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் அன்பு கேங்கை வலைவீசி தேடிவருகிறார்கள்.