இல்லத்தரசிகளுக்கு ஒரு தித்திப்பு செய்தி - வரப்பிரசாதமான அரசின் "மளிகை கடை" இங்கே வாங்கினால் மாதம் ரூ.600 மிச்சப்படும்

x

மளிகை பொருட்களின் விலையேற்றத்தால் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது அரசின் அமுதம் மக்கள் அங்காடி...மாத பட்ஜெட்டில் 500 முதல் 600 ரூபாய் குறைக்கும் வகையில் இயங்கி வரும் அமுதம் மக்கள் அங்காடி பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

காய்கறியை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், மளிகை பொருட்கள் விலை ஏற்றத்தால் நொந்து போய் உள்ள மக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது தமிழக அரசின் அமுதம் மக்கள் அங்காடி.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடியில் வெளி சந்தையை விட மளிகை பொருட்களின் விலை குறைவாக கிடைக்கிறது.

வெளி சந்தையில் ஒரு கிலோ துவரம் பருப்பு 169 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் அமுதம் மக்கள் அங்காடியில் 156 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெளிச்சந்தையில் ஒரு கிலோ உளுத்தம் பருப்பு 130 ஆக இருக்கும் நிலையில் அமுதம் மக்கள் அங்காடியில் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதேபோல 1 லிட்டர் 127 ரூபாய்க்கு விற்கப்படும் சமையல் எண்ணெய் அமுதம் அங்காடியில் 113 ரூபாயாகவும், 1 லிட்டர் 1100 ரூபாய்க்கு விற்கப்படும் ஆலிவ் ஆயில் 446 ரூபாய்க்கும், 86 ரூபாய்க்கு விற்கப்படும்1 கிலோ கடலை பருப்பு 76 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மேலும், வெளி மார்க்கெட்டில்130 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ பூண்டு அமுதம் மக்கள் அங்காடியில் 107 ரூபாய்க்கும், 180 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ புளி 120 ரூபாய்க்கும், 180 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ வத்தல் 144 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்கப்படும் கோதுமை 42 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் ஏற்கனவே நிறைய இடங்களில் அமுதம் அங்காடி இயங்கி வரும் நிலையில் இன்றைய தினம் சென்னை கோபாலபுரத்தில் நவீனப்படுத்தப்பட்ட அமுதம் மக்கள் அங்காடியை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சக்கரபாணி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

அமுதம் மக்கள் அங்காடியில் பொருட்களை வாங்கிய மகேஷ்வரி கூறும் போது, வெளிச்சந்தையை விட அமுதம் மக்கள் அங்காடியில் பொருட்கள் விலை குறைவாக இருக்கிறது. மாத பட்ஜெட்டில் 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம் என்றார்.

இதுபோன்ற அங்காடிகளை தமிழகம் முழுவதும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஆனந்த்...

விலையேற்றத்தால் புளிகரைத்த வயிற்றில் பால்வார்த்து வருகிறது அமுதம் மக்கள் அங்காடி என்றால் மிகையல்ல...


Next Story

மேலும் செய்திகள்