கால்பந்திற்கு FIFA.. கிரிக்கெட்டிற்கு WC..அதுபோல டென்னிஸிற்கு 'விம்பிள்டன்' பட்டம் - களமாடக் காத்திருக்கும் முன்னணி வீரர்கள்

x

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் லண்டனில் இன்று தொடங்க உள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

பச்சைப் பசேல் ஆடுகளம்... பாரம்பரியம் மிக்க டென்னிஸ் தொடர்... அணிவகுத்து நிற்கும் நட்சத்திர வீரர்கள்... ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் புடைசூழ ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், லண்டனில் இன்று ஆரம்பமாகிறது.

கால்பந்திற்கு ஃபிஃபா உலகக்கோப்பை, கிரிக்கெட்டிற்கு 50 ஓவர் உலகக்கோப்பை என்றால் டென்னிஸிற்கு விம்பிள்டன் பட்டம்....

1877ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், 146 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. அதிகபட்ச அந்தஸ்தை அளிக்கும் இந்த தொடரை வெல்வதுதான் டென்னிஸ் வீரர்களின் லட்சியம்... விருப்பம்... கனவு... எல்லாம்...

விம்பிள்டன் டென்னிஸின் ஆடவர் பிரிவில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் ஃபெடரர்தான் ராஜா... இதுவரை 8 முறை விம்பிள்டன் பட்டத்தை உச்சிமுகர்ந்துள்ளார் ஃபெடரர்...

விம்பிள்டன் தொடரின் மகளிர் பிரிவில் அதிக முறை வென்றவர் அமெரிக்க முன்னாள் வீராங்கனை மார்ட்டினா நவ்ராட்டிலோவா... 9 முறை விம்பிள்டனில் மார்ட்டினா மகுடம் சூடி உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஜெர்மனியின் ஸ்டெஃபி கிராஃபும், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும் 7 முறை விம்பிள்டன் பட்டத்தை முத்தமிட்டு உள்ளனர்.

ஓய்வு பெற்றதால் ஃபெடரர் மற்றும் செரீனா வில்லியம்ஸின் டச் (TOUCH) இல்லாமல் நடப்பு விம்பிள்டன் தொடர் நடைபெற உள்ளது. காயம் காரணமாக நடால் பங்கேற்காதது ரசிகர்களுக்கு சோகம் தான்...

7 முறை விம்பிள்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், 8வது முறையாக பட்டம் வென்று ஃபெடரரின் சாதனையை சமன் செய்யும் முனைப்பில் களம் காண உள்ளார். கடந்த நான்கு விம்பிள்டனில் ஜோகோவிச் தான் வெற்றிவாகை சூடி ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

மறுபுறம் ஜோகோவிச்சின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் மெத்வதேவ், அல்கராஸ், சிட்ஸிபாஸ், ரூப்லெவ், ஸ்வரெவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காத்திருக்கின்றனர்.

மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் ரைபாகினா, போலந்தைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை இஹா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா, கோகோ காஃப், பெலாரஸின் சபலென்கா என பட்டத்தை வெல்ல வீராங்கனைகள் வரிசைக் கட்டி நிற்கின்றனர்.

இந்தியா தரப்பில் ஒற்றை நம்பிக்கையாக ரோஹன் போபண்ணா மட்டுமே விம்பிள்டன் தொடரில் களம் காண்கிறார். இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் போபண்ணா...


Next Story

மேலும் செய்திகள்