உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டி பணம் பறிக்க முயற்சி...? வேலூர் மாவட்டத்தை குறிவைத்த போலி ஐஏஎஸ்...

x

வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் என பலருக்கும் கடந்த சில வாரங்களாக செல்போனில் ஒரு அழைப்பு வந்திருக்கிறது. முதலமைச்சர் தனிப்பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சிவக்குமார் என அறிமுகம் செய்து கொண்ட அந்த நபர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை மிரட்ட தொடங்கியிருக்கிறார். அவர்கள் மீது அதிக அளவு மோசடி புகார் வந்திருப்பதாகவும் அதை பற்றி விசாரிக்க சென்னை வர வேண்டும் என்று கூறியிருக்கிறார் அந்த ஐஏஎஸ் ஆசாமி.

இதனால் குழம்பி போன உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். விசாரணையில் சிவக்குமார் என்ற பெயரில் எந்த ஐஏஎஸ் அதிகாரியும் முதலமைச்சர் தனிப்பிரிவில் வேலை பார்க்கவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. உடனே போலீசார் செல்போன் சிக்னல் மூலம் சிவக்குமாரை ட்ராக் செய்திருக்கிறார்கள். இறுதியாக அவரை சென்னை விருகம்பாக்கத்தில் மடக்கி பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது தான் அவர் ஒரு போலி ஐஏஎஸ் என்றும் கடந்த 3 வருடங்களாக மீண்டும் மீண்டும் இதே ஏமாற்று வேலையை அரங்கேற்றி வருவதும் அம்பலமாகியிருக்கிறது.

அவரது உண்மையான பெயர் சுபாஷ். சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி. முதன் முதலில் அவர் கைவரிசை காட்டிய இடம் சென்னை மதுரவாயல். டிப்டாப் உடை... நுணி நாக்கில் ஆங்கிலம்... சைரன் வைத்த காரோடு போஸ் என சுபாஷின் தோரணையை பார்க்கும் யாருக்கும் அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி தான் என்பதில் எந்த சந்தேகம் வராது. இந்த நம்பிக்கையை சாதகமாக்கி கொண்ட சுபாஷ் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் லட்ச கணக்கில் பணம் பறித்திருக்கிறார்.பணம் கொடுத்தவர்கள் வேலை இன்னும் வரவில்லையே என அவருக்கு போன் செய்தால் திமிரோடு பேசி அவர்களை மிரட்டி ஆப் செய்வது சுபாஷின் வழக்கம். கிடைக்கும் கேப்பில் எல்லாம் தான் எவ்வளவு பெரிய ஆள் என்பதை விடாமல் பேசி பணம் கொடுத்தவரை ஆட்டம் காண வைப்பதும் சுபாஷின் அஸ்திரங்களில் முக்கியமான ஒன்று.

பாமரர்களை மட்டும் இல்லாமல் உண்மையாக படித்து பரிட்சை எழுதி பணியிலிருக்கும் போலீஸ் அதிகாரிகளை கூட சுபாஷ் விட்டுவைக்கவில்லை. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக எஸ்பி தொடங்கி ஏட்டு வரை அனைவரையும் வெளுத்து வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. மதுரவாயலை அடுத்து சுபாஷ் கைவரிசை காட்டிய ஊர் திருவண்ணாமலை. இந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வந்தவர் செளந்தர்ராஜன். அவரிடம் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு பழகியிருக்கிறார் சுபாஷ்.செளர்ந்தர்ராஜனின் மனைவி சென்னையில் மின்சார துறையில் வேலை செய்து வந்திருக்கிறார். அவருக்கு திருவண்ணாமலைக்கு டிரான்ஃபர் கிடைத்திருக்கிறது. தான் சிபாரிசு செய்ததால் தான் பணி மாறுதல் கிடைத்ததாக கூறி செளந்தர்ராஜனிடம் பணம் கேட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார் சுபாஷ்.அந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சுபாஷை கைது செய்திருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ், ஆர்.டி.ஓ முதன்மை செயலாளர் என பல்வேறு அரசு பதவிகளுக்கான அரசு முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டைகளை கைப்பற்றியிருக்கிறார்கள்.இப்படி மூன்றுக்கும் மேற்பட்ட முறை சிறைக்கு சென்றுவந்த சுபாஷ் வெளியே வந்ததும் மீண்டும் மோசடியில் ஈடுபட தொடங்கியிருக்கிறார். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்று சொல்லுவார்கள் அது சுபாஷ் விஷயத்தில் உண்மை தான் என்று தெரிகிறது


Next Story

மேலும் செய்திகள்