வேன் டிரைவர் இரும்பு ராடால் அடித்துக்கொலை.... கள்ளக்காதலால் பலியான அப்பாவி கணவன்....

x

உயிர பனையம் வச்சி, மின்னல் வேகத்துல வண்டிய ஓட்டி பல உயிர்கள காப்பாத்துன எத்தனையோ ஆம்புலென்ஸ் டிரைவர்கள நாம பாத்திருப்போம். ஆனா, இங்க ஒருத்தரு அநியாயமா ஒரு உயிர எடுத்து இருக்காரு. அதுக்கான காரணம் ஏத்துக்க முடியாத ஒன்னு.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதி..

பெண்களின் அலறல் சத்தம் அங்கிருந்த மண்சாலையை நடு நடுங்க செய்தது.

சாலை முடிவில் தலையில் ரத்த காயங்களுடன் ஒரு ஆணின் சடலமும், அதன் மீது ஒரு பைக்கும் கிடந்தது..

பார்ப்பதற்கு விபத்து போன்று காட்சியளிக்கும் இது ஒரு திட்டமிட்ட படுகொலை என அப்போது அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.

காரணம்.....போலீசாரும், தடயவியல் நிபுணர்களும், மோப்பநாயுடன் அந்த இடத்தையே அலசி ஆராய்ந்தும் கொலைக்கான எந்த தடையமும் கிடைக்காமல் போனதுதான்.


சடலமாக கிடந்தவர் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள சாணார்பதி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து. 37 வயதான இவர், தனியார் பள்ளியில் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்திருக்கிறார். இவருக்கு கல்யாணி என்வருடன் திருமணமாகி ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று மாரிமுத்து இப்படி ரத்த காயத்துடன் சடலமாக கிடந்திருக்கிறார். போலீசார், சடலத்தை மீட்டு ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.


சடலத்தின் உடற்கூராய்வு அறிக்கை நடந்திருப்பது கொலைதான் என்று சான்றளித்திருக்கிறது. உடனே போலீசார், இந்த சம்பவத்தை கொலை வழக்காக மாற்றி விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள்.

மாரிமுத்துவுக்கு சொல்லிக்கொள்ளும் படி எந்த பகையோ, முன்விரோதமோ இல்லை. ஆனால் அவரது மனைவியின் மீது எக்கச்சக்கமான கிசுகிசுக்கள் வந்து குவிந்துள்ளன. அந்த கிசுகிசுப்பின் பின்னால் இருந்த பெயர் மோகன்.

உடனே மோகனை துண்டாக தூக்கி வந்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது தான் அனைத்து உண்மைகளும் வெளிவந்திருக்கிறது.

மாரிமுத்துவின் சடலம் வைக்கப்பட்டிருக்கும் இதேபோன்று ஒரு மருத்துவனையில் இருந்து தான் அவரின் சாவு ஓலையும் எழுதப்பட்டிருக்கிறது.

ஆம்....மாரிமுத்துவின் மனைவி கல்யாணி சத்யமங்கலம் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்திருக்கிறார். அதே மருத்துவமனையில் 108 ஆம்புலென்ஸ் டிரைவராக வேலை செய்தவர் தான் இந்த மோகன். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாற, அடிக்கடி சத்யமங்கலம் மருத்துவமனையில் வண்டியை ஆல்ட் போட்டு விட்டு, கல்யாணியோடு கள்ளக்காதலில் மூழ்கி திளைத்திருக்கிறார் மோகன்.

இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் மாரிமுத்துவுக்கு தெரியவர, மனைவியை வன்மையாக கண்டித்திருக்கிறார்.

ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல், இருவரும் ஆம்புலென்ஸில் காதல் வளர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மாரிமுத்துவின் கண்டிப்பும் கடுமையாகி இருக்கிறது.

இதற்குமேலும் மாரிமுத்துவை விட்டு வைக்க கூடாதென நினைத்த மோகன் அந்த கொடூரத்தை செய்ய துணிந்திருக்கிறார்.

சம்பவம் நடந்த அன்று சமாதானம் பேசுவதாக கூறி மாரிமுத்துவை மதுகுடிக்க அழைத்து சென்றிருக்கிறார் மோகன்.

மாரிமுத்துவுக்கு போதை தலைக்கேறியதும், அவரை இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்திருக்கிறார். நடந்த கொலையை மறைக்க நினைத்த மோகன், சடலத்தையும் மாரிமுத்துவின் பைக்கையும் மண் சாலையில் போட்டு விபத்து போல சித்தரித்ததாக விசாரனையில் கூறி இருக்கிறார்.

விசாரனையின் முடிவில் போலீசார் மோகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பலரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்