"நுங்கு, குலோப் ஜாமூன் விவகாரம்.. ஷர்மிகா மீது உரிய நடவடிக்கை" - சித்த மருத்துவ இயக்குனர் பேட்டி

நுங்கு, குலோப் ஜாமூன் விவகாரம்.. ஷர்மிகா மீது உரிய நடவடிக்கை - சித்த மருத்துவ இயக்குனர் பேட்டி
x

"நுங்கு, குலோப் ஜாமூன் விவகாரம்.. ஷர்மிகா மீது உரிய நடவடிக்கை" - சித்த மருத்துவ இயக்குனர் பேட்டி


சித்த மருத்துவராக இருப்பவர் ஷர்மிகா. இவர் பாஜக நிர்வாகி டெய்சி சரணின் மகள். அண்மையில் ஷர்மிகா தெரிவித்த பல்வேறு கருத்துகள் பெரும் விவாதப் பொருளாக மாறியது. பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த அவர், மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சமூக வலைதளங்களில் இணையவாசிகள் அவரைக் கடுமையாக விமர்சித்தனர்.

மீம்ஸ்கள், விமர்சன வீடியோக்கள் என எங்கும் ஷர்மிகாவின் கருத்துகள் தான் நிறைந்திருந்தது. குறிப்பாக, "குலோப் ஜாமூன் சாப்பிட்டால் ஒரே நாளில் 3 கிலோ எடை கூடும், குப்புற தூங்கினால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும், நம்மை விட உயரம் அதிகமாக இருக்கும் மிருகங்களைச் சாப்பிடக் கூடாது, குறிப்பாக மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது" போன்ற கருத்துகளை அவர் பகிர்ந்ததே பெரும் சர்ச்சைக்குள்ளானது.

ஒரு கட்டத்தில் "இவர் உண்மையிலேயே படித்து தான் மருத்துவர் ஆனாரா?" எனவும் இணையவாசிகள் கேள்வியெழுப்பினர். குறிப்பிட்ட சில மருத்துவர்களே, ஷர்மிகாவை எதிர்த்து கருத்துகளைப் பதிவிட்டனர். பிரச்சினை பெரிதானதால் விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட ஷர்மிகா, சில கருத்துகளைப் பேச்சுவாக்கில் சொல்லிவிட்டேன் என்று கூறி மன்னிப்பும் கேட்டார். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இச்சூழலில் அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்திய மருத்துவ கவுன்சில், ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பி நேரில் வந்து விளக்கமளிக்க உத்தரவிட்டது. 15 நாட்கள் நேரமும் கொடுத்திருந்தது. இன்றோடு 15 நாள் நிறைவுபெறும் நிலையில், அரும்பாக்கத்திலுள்ள சித்த மருத்துவ கல்லூரியில் நேரில் ஆஜரானார். சர்ச்சை கருத்துகள் குறித்து சித்த மருத்துவ இயக்குனர் கணேசன் ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தினார்.

மருத்துவ அறிவியல் ஆதாரத்தோடு தான் கருத்துகளைச் சொன்னாரா, முறைப்படி பதிவு செய்துள்ளாரா, கருத்துகள் சித்த மருத்துவ விதிகளுக்குட்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் ஷர்மிகாவிடம் கேட்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கணேசன், மருத்துவர் ஷர்மிகாவிடம் நுங்கு, குலோப் ஜாமூன், மார்பகப் புற்றுநோய் குறித்த அவரின் கருத்துகள் குறித்து விசாரிக்கப்பட்டதாகக் கூறினார்.

இது முதற்கட்ட விசாரணை தான் என்ற அவர், பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதனை ஆய்வுசெய்து நிபுணர்கள் அளிக்கும் தகவல்படி ஷர்மிகா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்