சிதறி உடைந்த தேசியவாத கட்சி.. சித்தப்பாவுடன் யுத்தத்தில் மகன் - பலம் கூட்டும் பாஜக - பதற்றத்தில் எதிர்க்கட்சிகள்..பிளவுக்கு யார் காரணம்?

x

தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு என்ற போட்டியில், சரத் பவாரும், அஜித் பவாரும் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். போட்டி கூட்டம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

மகராஷ்ட்ராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சித்தப்பாவிற்கும், மகனுக்கும் நடக்கும் யுத்தத்தில் யாருக்கு வெற்றிக்கிட்டும் என்பது தற்போது வரை கேள்விக்குறியாக உள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 52 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ள நிலையில், கட்சியில் யார் கை ஓங்கியுள்ளது என்பதை காட்டும் வகையில் சரத் பவாரும், அஜித் பவாரும் ஒரே நேரத்தில் மும்பையில் கூட்டம் நடத்தினார்.

சரத்பவார் நடத்தும் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் கொறடா ஜிதேந்திரா அவாட் அறிவித்த நிலையில், கலந்து கொள்ளாத எம்.எல்.ஏக் கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஒய்பி சவான் அரங்கில் நடைபெற்ற சரத் பவாரின் கூட்டத்தில் 13 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

இதில் சிலர் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்ற கூட்டத்திலும் பங்கேற்றிருந்தனர்.

அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்த 3 எம்.எல்.ஏக்கள் தவறுதலாக வழிநடத்தப்பட்டதாக கூறி மீண்டும் சரத் பவாருடன் இணைந்தனர்.

அதே போல், தனக்கு ஆதரவாக 40 எம் .எல்.ஏக்கள் இருப்பதாக அஜித் பவார் கூறிய நிலையில், அவரது கூட்டத்திற்கு 30 எம்.எல்.ஏக் களே வந்திருந்தனர்.

வருகை புரிந்தவர்களின் விவரங்களை சேகரித்து வைத்த அஜித் பவார், அவர்களிடம் பிரமாண பத்திரத்திலும் கையெழுத்து வாங்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆதரவு கையெழுத்துகளை தேவைப்படும் போது தேர்தல் ஆணையத்திடம் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அஜித் பவார் தரப்பு சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சரத்பவார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அஜித்பவார் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இருதரப்பிலும் பங்கேற்ற எம்.எல்.ஏக்களை தவிர்த்து 9 எம்.எல்.ஏக்கள் எங்கும் செல்லாமல் அமைதி காப்பது குறிப்பிடத்தக்கது.

இருத்தரப்பிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மாறி மாறி வார்த்தை போரும் வலுத்து வருகிறது.

கூட்டத்தில் மேடையில் பேசிய அஜித் பவார், சரத் பவார் தன்னை வில்லனாக சித்தரித்ததாக குற்றஞ்சாட்டினார். மேலும் பாஜகவில் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஓய்வு பெற்றதை சுட்டிக்காட்டிய அஜித் பவார், 83 வயதாகும் சரத் பவாரிடம் ஆசீர்வாதமே தங்களுக்கு வேண்டும் என சொந்த சித்தப்பாவையே விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்த தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சூலே, எங்களை அவமதிக்கலாம் நம் தந்தையை அவமதிக்கக்கூடாது என காட்டமாக தெரிவித்தார்.

என்னதான் சரத் பவாரை விட அஜித் பவாருக்கு எம்.எல்.ஏக் கள் ஆதரவு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் தகுதிநீக்க நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவருக்கு மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்