பஸ்சில் மாற்று திறனாளிகளுக்கான சாய்தள பாதை அமைப்பதில் சிக்கல்!!

x

மாற்றுத் திறனாளிகள் ஏறும் வகையில் பேருந்துகளின் பின்புறம் சாய்தள பாதை அமைப்பதில் தொழில் நுட்பரீதியாக சிக்கல்கள் உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது குறித்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில், பேருந்தின் பின்புறம் சாய்தளப்பாதை அமைப்பதால் பேருந்து இயக்குவதில் சிரமம் ஏற்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவான பேருந்துகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், ஏதோ ஒரு பேருந்தை வழங்கிவிட்டு அதில் தான் பயணிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது என்றும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இருவகையான பேருந்துகளும் எவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக இயக்கப்படும் என்பது தொடர்பான செய்முறை விளக்கத்தை வழங்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர்.

தாழ்தள பேருந்துகள் வரும் நேரத்தை தெரிவிக்கும் செயலியை அறிமுகப்படுத்த அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்